வாழ்க்கையில் எதையும் சாதிக்க வயது என்றும் ஒரு தடையே இல்லை என்பதை அவ்வப்போது நம்மைச் சுற்றியுள்ள பலரும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றனர். அத்தகையோரில் ஒருவர் திருவாட்டி சாரதா செல்லம். அவருக்கு வயது 101.
ஓய்வுபெற்ற ஆசிரியரான திருவாட்டி சாரதா வாரம் இருமுறை புக்கிட் மேராவில் உள்ள என்டியுசி ஹெல்த்தின் துடிப்பாக மூப்படைதல் நிலையத்துக்குச் சென்றுவிடுவார்.
அங்கு ஓவியம் தீட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் களமிறங்கும் திருவாட்டி சாரதா, கொண்டாட்டங்களையும் தவறவிடுவதில்லை.
64 வயது மருமகள் திருவாட்டி உமாவுடன் துடிப்பாக மூப்படைதல் நிலையத்துக்குச் செல்லும் திருவாட்டி சாரதாவுக்கு ‘தில்ருபா’ என்ற இசைக்கருவியை வாசிக்கத் தெரியும்; கணினியையும் நன்கு பயன்படுத்தத் தெரியும்.
திருவாட்டி சாரதாவைப் போல சிங்கப்பூரில் நூறு வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 1,500ஆக இருந்தது. அது பத்தாண்டுக்குமுன் 1,200ஆக இருந்தது.
என்டியுசி ஹெல்த்தின்கீழ் செயல்படும் 26 துடிப்பாக மூப்படைதல் நிலையங்களுக்குச் செல்லும் 90 வயதுக்கும் அதிகமான மூத்தோர் எண்ணிக்கையும் ஒரே ஆண்டில் இரட்டிப்பானது.
2024ஆம் ஆண்டு அத்தகைய நிலையங்களுக்குச் சென்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூத்தோர் எண்ணிக்கை 200. கடந்த ஆண்டு அது 450ஆனது.
மூத்தோரில் பலர் வீடுகளைவிட்டு துணிவுடன் வெளியே வந்து, துடிப்பான வாழ்க்கை வாழ விரும்புவதை அந்தப் புள்ளிவிவரம் காட்டுவதாகக் கூறினார் என்டியுசி ஹெல்த் துடிப்பாக மூப்படைதல் நிலையங்களின் தலைவர் டாக்டர் லிலி இயோ.
தொடர்புடைய செய்திகள்
“எண்ணிக்கை அதிகரித்ததுடன் பல மூத்தோரும் மீண்டும் நிலையங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது,” என்றார் அவர்.
என்டியுசி ஹெல்த்தின் மூத்தோர் நிலையங்கள் ஏறக்குறைய 22,000 மூத்தோருக்குச் சேவை வழங்குகின்றன.
கூடுதலான மூத்தோர் தனிமையில் வாழக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த ஆண்டு மே மாதம் கூறியிருந்தார்.
2023ஆம் ஆண்டு 76,000 மூத்தோர் தனிமையில் வாழ்ந்தனர். அந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 122,000த்தை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.
எனவே, கூடுதலான மூத்தோருக்கு உற்ற நண்பர்களும் சமூக ஆதரவும் தேவைப்படும் என்று திரு ஓங் அப்போது வலியுறுத்தினார்.
துடிப்பாக மூப்படைதல் நிலையங்களை மேம்படுத்தி விரிவுபடுத்தும்போது இன்னும் அதிகமான மூத்தோர் அந்நிலையங்களுக்குச் சென்று நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் ஆதரவில் சமூகப் பங்காளிகள் தீவெங்கும் 220 துடிப்பாக மூப்படைதல் நிலையங்களை நடத்துகின்றன. கடந்த ஆண்டு அந்த நிலையங்களுக்குச் சென்ற மூத்தோர் எண்ணிக்கை 80,000லிருந்து 100,000ஆகக் கூடியது.

