மத்திய சேமநிதியின் சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாக அடுத்த ஆண்டு (2026) இறுதிவரை நீட்டிக்கப்படும்.
வட்டி விகிதம் குறைந்துவரும் சூழலில் சேமநிதிச் சேமிப்பிலிருந்து கிடைக்கும் வருவாய் தொடரும் என்ற உத்தரவாதத்தை உறுப்பினர்களுக்கு அது வழங்கும்.
அடுத்த மாதம் (அக்டோபர் 2025) முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31 வரை, வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. அவற்றின்படி சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும் சாதாரணக் கணக்கிற்கு 2.5 விழுக்காடாகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடன்களுக்குச் சலுகை அடிப்படையிலான 2.6 விழுக்காடாகவும் தொடரும்.
சேமநிதி உறுப்பினர்களுக்குச் சேமிப்பில் தொடர்ந்து கூடுதல் வட்டியும் கிடைக்கும்.
55 வயதுக்குட்பட்டோர், அவர்களின் ஒட்டுமொத்தச் சேமிப்பில் முதல் $60,000க்குக் கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டியைப் பெறுவர். அதில் சாதாரணக் கணக்கிற்கு உச்ச வரம்பு $20,000.
55 வயதை எட்டியோருக்கு ஒட்டுமொத்தச் சேமிப்பின் முதல் $30,000க்குக் கூடுதலாக இரண்டு விழுக்காட்டு வட்டி கிடைக்கும். அதிலும் சாதாரணக் கணக்கிற்கு உச்ச வரம்பு $20,000. அடுத்த $30,000க்கு இன்னும் ஒரு விழுக்காட்டு வட்டி அதிகமாக அவர்கள் பெறுவர்.
ஒருவரின் சாதாரணக் கணக்கில் கூடுதலாகக் கிடைக்கும் வட்டி, சிறப்புக் கணக்கு அல்லது ஓய்வுக்காலக் கணக்கில் போடப்படும்.