அரசாங்க அதிகாரிகளாக வேடமிட்டு நடத்தப்படும் மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரே தொடர்பு எண்ணை மத்திய சேமநிதிக் கழகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியிலிருந்து 62271188 எனும் தொடர்பு எண்ணை மட்டும் பயன்படுத்தி அது தனது உறுப்பினர்களை அழைத்து வருகிறது.
இத்தகவலை மத்திய சேமநிதிக் கழகம் செவ்வாய்க்கிழமை (மே 20) வெளியிட்டது.
“இந்நடவடிக்கை மூலம், மத்திய சேமநிதிக் கழகத்திடமிருந்துதான் அழைப்பு வருகிறது என்று உறுப்பினர்கள் உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம்,” என்று கழகம் கூறியது.
இந்தத் தொடர்பு எண் கழகத்தின் இணையப்பக்கத்தில் உள்ளது.
இதற்கு முன்பு உறுப்பினர்களை அழைக்க 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 62271188 மற்றும் 62023388 தொடர்பு எண்கள் பயன்படுத்தப்பட்டன.
இனி மத்திய சேமநிதிக் கழகம் தொலைபேசி மூலம் அழைத்து தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் gov.sgலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். @cpf.gov.sg அல்லது e.cpf.gov.sg என முடியும் மின்னஞ்சல் முகவரிகளிடமிருந்து மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும்.
தங்கள் வாழ்நாளுக்குப் பின் மத்திய சேமநிதிப் பணம் யாரைச் சென்றடைய வேண்டும் என்று இணையம் மூலம் நியமனம் செய்பவர்கள் இவ்வாண்டு மே மாதத்திலிருந்து ‘பயோமெட்ரிக்ஸ்’ அடையாள முறையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“மோசடிக்காரர்கள் இயங்கும் முறை மாறி வருகிறது. இதைக் கண்காணிக்க வங்கிகளுடனும் அரசாங்க அமைப்புகளுடனும் மத்திய சேமநிதிக் கழகம் தொடர்ந்து இணைந்து செயல்படும். எங்கள் பாதுகாப்பு அம்சங்கள் மறுஆய்வு செய்யப்படும். சௌகரியத்துக்கும் பாதுகாப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படும்,” என்று மத்திய சேமநிதிக் கழகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
பணத்தை அனுப்பி வைக்கும் முறை, வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கும் முறை, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதிகாரபூர்வமற்ற செயலித் தளங்களிலிருந்து கைப்பேசிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லும் முறை ஆகியவற்றை மத்திய சேமநிதிக் கழகம் ஒருபோதும் கடைப்பிடிக்காது என்று பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிவிட்டதாகச் சந்தேகம் எழுந்தால் உடனடியாக வங்கிக் கணக்குகளை முடக்கி, சிங்பாஸ் மறைச்சொல்லை மாற்றி, மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும் அம்சத்தை முடக்கி, காவல்துறையிடமும் மத்திய சேமநிதிக் கழகத்திடமும் உடனடியாகப் புகார் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கும் நினைவூட்டப்படுகிறது.