மத்திய சேமநிதி (திருத்த) மசோதா நிறைவேற்றம்

2 mins read
34419af0-ef85-4ac3-a7a9-7decbd4c4c7d
ஐம்பத்தைந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையடோருக்கான மத்திய சேமநிதி சிறப்புக் கணக்குகள் (எஸ்ஏ) அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மூடப்படும்.  - படம்: பெரித்தா ஹரியான்

ஐம்பத்தைந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையோருக்கான மத்திய சேமநிதி சிறப்புக் கணக்குகள் (எஸ்ஏ) அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மூடப்படும்.

மத்திய சேமநிதி (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 14) நிறைவேற்றப்பட்டது. இதில், இதர மாற்றங்களுடன் சிறப்புக் கணக்கு மூடலும் இடம்பெறுகிறது. 55, அதற்கு மேற்பட்ட வயதினருக்கான சிறப்புக் கணக்கு மூடப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மாற்றங்கள் யாவை?

உறுப்பினர்களுக்கு அவர்களது சிறப்புக் கணக்கு மூடப்படுவது குறித்து கடிதம், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

சிறப்புக் கணக்கு மூடப்படும்போது அதில் இருப்புத்தொகை இருந்தால், அத்தொகை ஓய்வுக்காலக் கணக்குக்கு மாற்றப்படும்.

சிறப்புக் கணக்கு, ஓய்வுக்காலக் கணக்கு ஆகிய இரண்டும் தற்போது ஆண்டுக்கு 4.14 விழுக்காடு வட்டி ஈட்டுகின்றன. மத்திய சேமநிதி சாதாரணக் கணக்கிற்கு ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.

மசேநிதி உறுப்பினர்களையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் காப்புறுதித் திட்டமான வீட்டுப் பாதுகாப்புத் திட்டத்திலும் (Home Protection Scheme (HPS)) மாற்றங்கள் இருக்கும். இது மத்திய சேமநிதி உறுப்பினர் மரணம், மரணம் விளைவிக்கும் தீரா நோய், அல்லது நிரந்தரச் செயல் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பை இழக்காமல் பாதுகாக்கும்.

தற்போது, உறுப்பினர்கள் பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டால், அவர்களுக்கு ஏற்கெனவே சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும், நிலையான சந்தா விகிதத்தில் காப்புறுதி செய்யப்படுகிறார்கள்.

எனினும், தற்போது இக்காப்புறுதியைப் பெற ஏற்கெனவே உள்ள உடல் ஆரோக்கிய நிலைமைகளின் காரணமாக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1.3 விழுக்காடு அல்லது 1,400 விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படுகின்றனர்.

வரும் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து சில வகையான பக்கவாதம், இதயக் கோளாறு போன்ற மிகவும் தீவிரமல்லாத உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்களை உள்ளடக்கும் வகையில் இக்காப்புறுதித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று டாக்டர் டான் கூறினார்.

மேலும், பொது வீடமைப்பு, வேலைப் பதிவுகள், மத்திய சேமநிதி வாரியத் தலைமைத்துவம் போன்ற பல மத்திய சேமநிதி திட்டங்களின் செயல்முறைகள் மற்றும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதிலும் அதிக தெளிவு இருக்கும்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிநாடாளுமன்றம்புதிய சட்டம்