மத்திய சேம நிதியின் மையத் தத்துவமான தன்னம்பிக்கை என்றும் நிலைத்திருக்கும்: மூத்த அமைச்சர் லீ

3 mins read
b95f3daa-882d-45b1-b8ab-6ff1a27f06cd
சனிக்கிழமை (5 ஜூலை) நமது தெம்பனில் நடுவத்தில் இடம்பெற்ற மத்திய சேம நிதியின் 70வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய சேம நிதியின் மைய தத்துவமான ஒருவர் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருப்பதுபோல் தேவையான ஒன்றாக உள்ளது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒவ்வொரு தலைமுறையும் அவர்களின் சொந்த ஓய்வுக்கால தேவைக்கு நிதியளித்து வருகின்றனர். இதன் மூலம் இளைய தலைமுறையினர் மூத்த தலைமுறையினரின் ஓய்வுக்கால தேவைகளுக்கு நிதியளிக்கும் சுமையைத் தவிர்க்க முடிவதாக அமைச்சர் லீ சொன்னார்.

“நேர்மை, தனிப்பட்ட பொறுப்புணர்வு ஆகிய நெறிமுறைகள், வேலை, ஓய்வு, துடிப்பாக மூப்படைதல் ஆகியவற்றுக்கான சரியான அணுகுமுறைகளை வளர்க்கின்றன,” என்று திரு லீ கூறினார்.

சனிக்கிழமை (ஜூலை 5) நமது தெம்பனில் நடுவத்தில் இடம்பெற்ற மத்திய சேம நிதியின் 70வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவருடன் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் கலந்துகொண்டார்.

மத்திய சேம நிதியின் அணுகுமுறை இதர நாடுகளில் செயல்படும் ‘பேஜி’ ஓய்வுக்கால முறை போலன்று என்று குறிப்பிட்ட திரு லீ, அந்த அணுகுமுறை அரசியல் ரீதியாக மிகக் கடினமானது என்றார்.

வேலைக்குச் செல்லும் பலர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாலும் குறைந்த வருமான ஊழியர்களுக்கும் வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகளுக்கும் உரிய உதவி உள்ளது என தெரிவித்தார் திரு லீ.

நாட்டின் பொருளியல் செழிப்பாக இருக்கும்போது முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை, மாஜுலா தலைமுறை ஆகியோருக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

“மூத்த தலைமுறைக்குத் தேவையான உதவித் திட்டங்கள் இருந்தாலும் உங்களுடைய வருங்கால தேவைக்கு நீங்கள் தான் முதலில் முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். அது போதுமானதாக இல்லையென்றால் அரசாங்கம் உங்களுக்கு உதவும்,” என்று கூறினார் மூத்த அமைச்சர் லீ.

மறைந்த பிரிட்டிஷ் நிதி நிபுணர் லார்ட் பால் மைனர்சை முன்பு சந்தித்த தருணத்தை தனது உரையில் நினைவுகூர்ந்தார் திரு லீ.

லார்ட் பால் மைனர்ஸ் நீண்டகாலம் வாழும் ஒருவர் ஓய்வுக்காலத்தைச் சமாளிக்க வேலை செய்யும் போது அதிகம் சேமிப்பது, ஒவ்வொரு மாதமும் குறைவாகச் செலவு செய்வது, அல்லது நீண்ட காலம் வேலை செய்துவிட்டு பின்னர் ஓய்வெடுக்கலாம் என்று தன்னிடம் சொன்னதாகக் கூறினார் அமைச்சர் லீ.

“இதற்கு குறுக்கு வழி ஏதும் இல்லை. சிங்கப்பூர் உட்பட அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு வழியைத் தேடி கொண்டு தான் இருக்கின்றன,” என்றார் திரு லீ.

மத்திய சேம நிதிக்கு செய்யவேண்டிய மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அது கவனத்துடன் செய்ய வேண்டுமென்ற அமைச்சர் லீ, அது பலபலரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்ஒன்று என்றார்.

மக்களின் ஆதரவு கிடைக்க மத்திய சேம நிதியின் திட்டங்கள் தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கப்பட வேண்டுமென்ற திரு லீ, அதற்கு மக்களின் நம்பிக்கை மிக அவசியம் என்றும் சொன்னார்.

மத்திய சேம நிதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்த திரு லீ, சேமிப்பு திட்டம் புதிய தலைமுறையினருக்காக மாற்றியமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

1984ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் லீ, மத்திய சேம நிதிச் சந்தா விகிதத்தில் அப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டதாக அதன் வரலாற்றைப் பற்றி பேசினார்.

தற்போது மத்திய சேம நிதிக்குச் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து பேசிய திரு லீ, அந்த முறை சிங்கப்பூரர்களின் ஓய்வுக்காலத்திற்கு கைகொடுக்கும் மிக சிறப்பான முறை என்று பாராட்டினார்.

“உலகின் சிறந்த தேசிய ஓய்வுக்கால திட்டங்களில் ஒன்றாக சிங்கப்பூர் உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்று பெருமிதத்துடன் சொன்னார் அமைச்சர் லீ.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குடன் புதிய தளத்தை பார்வையிடும் மூத்த அமைச்சர் லீ.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குடன் புதிய தளத்தை பார்வையிடும் மூத்த அமைச்சர் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்