நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர், அந்தச் சாதனம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் மருத்துவத் தேவைச் சான்றிதழைப் பெறுமாறு நினைவூட்டப்படுகின்றனர்.
நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான கடுமையான விதிமுறைகள் ஜூன் 1 முதல் நடப்புக்கு வர உள்ள நிலையில், அந்த நினைவூட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 500க்கும் மேற்பட்டோர் மருத்துவத் தேவைச் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
கைகளால் தள்ளி இயக்கப்படும், கழற்றிப் பொருத்தக்கூடிய மோட்டார் இணைப்புகளைக் கொண்ட சாதாரண சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோரும் அந்தச் சான்றிதழைப் பெறுவது அவசியம்.
அந்தச் சான்றிதழை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய விதி நடப்புக்கு வந்ததும் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரிடம் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தி, மருத்துவத் தேவைச் சான்றிதழைச் சரிபார்ப்பர் என்று ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
குறிப்பிட்ட சிலருக்கு அந்தச் சான்றிதழில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எழுபது, அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோர், அரசாங்கத்தின் உடற்குறை மற்றும் நடமாட்ட ஆதரவுத் திட்டப் பயனாளர்கள் போன்றோர் சான்றிதழ் பெறத் தேவையில்லை.
மருத்துவத் தேவைச் சான்றிதழோடு, நடமாட்டச் சாதனங்களின் வேகக் கட்டுப்பாடும் ஜூன் 1ல் நடப்புக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பாதைகளில் அந்தச் சாதனங்களுக்கான வேகவரம்பு தற்போது மணிக்கு 10 கிலோமீட்டராக உள்ளது. அது இனி ஆறு கிலோமீட்டராகக் குறைக்கப்படும்.
தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவோர் அதனை 2028 டிசம்பர் 31 வரை பயன்படுத்தலாம். ஆயினும், வேக வரம்பை மணிக்கு ஆறு கிலோமீட்டருக்குள் அவர்கள் வைத்திருப்பது அவசியம்.
2029 ஜனவரி 1 முதல் எல்லா வகையான நடமாட்டச் சாதனங்களும் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளும் குறைவான வேகவரம்புக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்படும்.

