சமூகத்தை ஒன்றிணைத்த சிலோன் விளையாட்டு மன்றம்

2 mins read
59cdb685-43f3-431c-bc81-297d54862a89
மயில்வண்ணன் மகேந்திரன் (இடது), அவரது மனைவி துவாரகா மயில்வண்ணன், அவர்களின் தோழி திருமகள் சதீஷ்குமாருடன் (வலது). - படம்: அனுஷா செல்வமணி

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மயில்வண்ணன் மகேந்திரன், 55, துவாரகா மயில்வண்ணன், 48, தம்பதியினருக்கு சிங்கப்பூரில் உள்ள சிலோன் விளையாட்டு மன்றம் மூலம் இலங்கையிலிருந்து வந்த பிறருடன் ஒன்றிணைய வாய்ப்பு கிட்டியது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மன்ற உறுப்பினர்களாக இருந்துவரும் இருவரும், மன்றம் மூலம் தங்களின் பிள்ளைகளை இலங்கை கலாசாரக் கூறுகளுக்கு அறிமுகப்படுத்துவது, பிறருடன் நட்புறவு வைத்துக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலோன் விளையாட்டு மன்றம் விளையாட்டு, கலாசார, சமூக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) சிலோன் விளையாட்டு மன்றத்தில் காலை 9.30 மணியளவில் தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவுற்ற விழாவில் இத்தம்பதியினர் தங்களின் பிள்ளைகளுடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டனர்.

விளையாட்டு மனப்பான்மை, சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை பறைசாற்றும் வண்ணம் ஃபுட்சால் காற்பந்து விளையாட்டு, கிரிக்கெட் போட்டி, சிங்கப்பூர் தேசியக் கபடி அணியின் அம்சங்கள், நாற்காலி யோகா பயிற்சி அமர்வு, பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்ற விளையாட்டுகள் போன்றவை இடம்பெற்றன.

சிறியவர்களும் பெரியவர்களும் இன்பம் காணும் வகையில் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிறியவர்களும் பெரியவர்களும் இன்பம் காணும் வகையில் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. - படம்: அனுஷா செல்வமணி

இளம், சிறிய, வணிக உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் கூடங்களை அமைத்து வியாபாரம் செய்யும் வாய்ப்பு, உணவு வகைகள், கைவினைப் பொருள்கள், கலாசாரக் கூறுகளைக் கொண்டுள்ள பொருள்களின் விற்பனை போன்றவையும் விழாவில் இடம்பெற்றன.

சிறிய, வணிக உரிமையாளர்கள் அமைத்த சாவடிகளைப் பார்வையிடும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
சிறிய, வணிக உரிமையாளர்கள் அமைத்த சாவடிகளைப் பார்வையிடும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: அனுஷா செல்வமணி

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலவச மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கிட்டத்தட்ட 800 பேர் கலந்துகொண்ட விழாவில் மாலை 5.30 மணிக்கு கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாராட்டுப் பரிசை வழங்கும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
பாராட்டுப் பரிசை வழங்கும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: அனுஷா செல்வமணி

“இத்தகைய நிகழ்ச்சிகளை நாங்கள் பலமுறை ஏற்பாடு செய்திருந்தாலும் எஸ்ஜி 60 கொண்டாட்ட ஆண்டில் இன்னும் புதுமையாகச் செய்யும் வகையில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுத்தோம். அதனால், இலவச மருத்துவப் பரிசோதனைகள் சேர்க்கப்பட்டன,” என்றார் சிலோன் விளையாட்டு மன்றப் பொருளாளரும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான தனேந்திரன், 50.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்தில் விளையாட்டு, நல்வாழ்வு விரிவுரையாளரான ஆறுமுகம் காளியப்பன், 50, அங்குக் காற்பந்து பயிற்றுவிப்பாளராகவும் இருக்கிறார்.

தனது மாணவிகளை விழாவுக்கு அழைத்து வந்திருந்த ஆறுமுகம் காளியப்பன்.
தனது மாணவிகளை விழாவுக்கு அழைத்து வந்திருந்த ஆறுமுகம் காளியப்பன். - படம்: அனுஷா செல்வமணி

பெண்கள் காற்பந்து அணியில் இடம்பெறும் தம் மாணவிகளை விழாவில் நடைபெற்ற காற்பந்துப் போட்டிக்கு அழைத்து வந்திருந்த அவர், பெண்கள் காற்பந்து தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க இத்தகைய நிகழ்ச்சிகள் வழியமைப்பதாகச் சொன்னார்.

இலங்கை கலாசாரத்தைப் பற்றிப் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வீட்டில் நேரம் இல்லை எனக் கருதும் இல்லத்தரசி திருமகள் சதீஷ்குமார், 47, விழாவில் தம் பிள்ளைகள் கலாசாரத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வாய்ப்பு அமைந்ததாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்