தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி சுரங்கத்தை விரைவுச்சாலைக்கு அருகில் கட்டுவதன் சவால்

2 mins read
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை 4ஆம் கட்டம்
39e00a83-dd26-4a29-95df-dd7a490447e3
தஞ்சோங் ரூ வட்டாரவாசிகளுக்கு வசதியாக கேபிஇ குறுக்கே எம்ஆர்டி சுரங்கப் பாதையை அமைப்பது அவசியமானது. - படம்: கூகல் எர்த்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைக்கான எம்ஆர்டி சுரங்கத்தின் ஒரு பகுதிக்கும் அதன்கீழ் அமைந்துள்ள காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை (கேபிஇ) சுரங்கத்திற்கும் இடையே 37 சென்டிமீட்டர் இடைவெளி மட்டுமே.

இருப்பினும், தஞ்சோங் ரூ வட்டாரவாசிகளுக்கு வசதியாக இவ்வாறு கேபிஇ குறுக்கே சுரங்கப் பாதையை அமைப்பது அவசியம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் மே 20ஆம் தேதி கூறினார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைக்கான நான்காம் கட்டத்தின்கீழ் தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரீன் பரேட், மரீன் டெரஸ், சிக்லாப், பேஷோர் ஆகிய ஏழு எம்ஆர்டி நிலையங்கள் ஜூன் 23ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

நிலத்தடி விரைவுச்சாலையைத் தவிர்ப்பதற்காக எம்ஆர்டி சுரங்கத்தை, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கு அப்பால், குடியிருப்புப் பகுதியிலிருந்து விலகி அமைத்திட வேண்டியிருந்தது.

சுரங்கத்தின் இப்பகுதியை முடிப்பதற்கு 24 மாதங்கள் ஆகின.

கேபிஇ கட்டமைப்புக்குள் அதிகப்படியாக ஊடுருவும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கட்டுமானப் பணிகள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

தோண்டும் பணிகள் ஒவ்வொரு கட்டமாக அளவிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், விரைவுச்சாலையின் கட்டமைப்பில் கண்காணிப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டன. எம்ஆர்டி கட்டுமானப் பணிகளால் கட்டமைப்பு பாதிப்புறாமல் இருப்பதை இந்தச் சாதனங்கள் உடனுக்குடன் உறுதிப்படுத்தின.

பணிகள் முடிவடைந்ததும் இந்தக் கண்காணிப்புச் சாதனங்கள் அகற்றப்பட்டன.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் நான்காம் கட்டம், முதல் மூன்று கட்டங்களின் பாதையுடன் இணைக்கப்படவுள்ளது. இதன்படி உட்லண்ட்ஸ் நார்த் தொடங்கி கார்டன்ஸ் பை த பே வரை இணைப்பு அமைந்திடும்.

எம்ஆர்டி பாதையின் ஐந்தாம் கட்டம் 2026ஆம் ஆண்டு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய நான்கு கட்டங்களும் இதனுடன் இணைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்