சிங்கப்பூரில் தாய்மொழி ஆசிரியர்களாக விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதும் தமிழாசிரியர்களாக உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்துவது தொடர்ந்து சவாலாக இருப்பதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
தமிழாசிரியராகப் பணியாற்றுவதற்கு விண்ணப்பம் செய்த உள்ளூர்வாசிகளில் நான்கு விழுக்காட்டினர் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் வெற்றிகரமாகப் பணியமர்த்தப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து விண்ணப்பம் செய்தோரில் 2 விழுக்காட்டினர் மட்டுமே வேலையில் சேர்க்கப்பட்டனர்.
சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோரில் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
உள்ளூர் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடம் கற்பிக்கும் திறனின் அடிப்படையில் வெளிநாட்டினர் மதிப்பிடப்படுகின்றனர் என்று திரு லீ சுட்டினார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் தாய்மொழி ஆசிரியர்களாக உள்ளூர்வாசிகள் 87 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 140ஆக அதிகரித்தது.
சிங்கப்பூரில் தமிழ்மொழியைப் பாடமாகக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்த ஐந்தாண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.
2020ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 72 விழுக்காட்டினர் சீன மொழியையும் 17 விழுக்காட்டினர் மலாய் மொழியையும் ஆறு விழுக்காட்டினர் தமிழ்மொழியையும் கற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் ஆசிரியர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றபோதும் பற்றாக்குறை நிலவும்போது வெளிநாட்டு ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தமிழாசிரியர்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு தனபால் குமார்.
“ஒவ்வொரு பள்ளியிலும் தற்போது மூன்றிலிருந்து நான்கு தமிழாசிரியர்கள் வரை தேவைப்படுகின்றனர். ஆனால் உள்ளூர் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நீடிக்கிறது,” என்ற அவர், உள்ளூர் இளையர்கள் தமிழாசிரியர் துறை பக்கம் வரத் தயங்குவதாகக் குறிப்பிட்டார்.
தமிழாசிரியர் துறையைத் தெரிவுசெய்ய உபகாரச் சம்பளம் போன்ற பல வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிய அவர், கூடுதலான இளையர்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் கல்வியமைச்சும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறினார்.
தமிழாசிரியர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் நான்கு விழுக்காட்டினருக்கு மட்டுமே ஏன் வேலை கிடைக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு தனபால், “ஆசிரியர் துறையில் இணைவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று கற்றல் குறித்த அடிப்படைப் புரிதல் இருப்பது அவசியம்,” என்றார்.
ஆசிரியர் துறையில் கால் பதிக்க விரும்புவோருக்கு அடுத்த ஆண்டுமுதல் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் பயிற்சி வகுப்புகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருப்பதுகுறித்து திரு தனபால் பகிர்ந்துகொண்டார்.
“கல்வியமைச்சின் நேர்முகத் தேர்வுக்கு எப்படித் தயாராவது? என்னென்ன அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் போன்றவை பற்றி பயிற்சியில் கற்பிக்கப்படும்,” என்றார் அவர்.

