உணவுப்பொருள் தொடர்பான ஆதரவை வழங்குவோர் பெரும்பாலும் முழுமையற்ற, பழைய தகவல்களைக் கொண்டு செயல்படுவதாக அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. அவ்வாறு செய்வது, சீரற்ற விநியோகத்திற்கும் உணவுப்பொருள் வீணடைவதற்கும் வழிவகுப்பதாக அது கண்டறிந்தது.
வசதி குறைந்த குடும்பத்தார், மூத்தோர் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பல சிறு சிறு அமைப்புகள் செயல்படுவதாக ஆய்வு குறிப்பிட்டது. அதேநேரம் போக்குவரத்து, சேமிப்பு, மனிதவளம் உள்ளிட்ட செயல்முறைச் சவால்களை அவை சந்திப்பதாக ஆய்வு சுட்டியது.
சிங்கப்பூர் உணவு வங்கி, மே 15 ஆம் தேதி ‘ஹங்கர் ரிப்போர்ட்’ எனும் உணவுத் தேவை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘ஈஎச்எல்’ வளாகத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“இந்த அறிக்கை, உணவுப்பொருள் வழங்குவோரின் கண்ணோட்டங்கள், அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, களத் தேவைகளுக்கான ஆதரவுகளை ஒருங்கிணைக்கும் முறை ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்துள்ளது,” என்றார் அவர்.
துறையில் இயங்கும் பல தரப்பினரும் ஒரே திசையில் செல்வதை உறுதி செய்தல், குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப ஆதரவை அளித்தல், அதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளுதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அறிக்கை எடுத்துரைப்பதாக அவர் சொன்னார்.
மொத்தம் உணவுப்பொருளை வழங்கும் 52 பேரின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அவர்களில் 26 பேரிடம் விரிவான நேர்காணல்கள் நடத்தப்பட்டு அவற்றின் அடிப்படையில் ஆய்வு தொகுக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டின் முதற்பாதியிலிருந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில், வழங்குநர்களிடம் வேலை செய்யும் ஊழியர்களைவிடத் தொண்டூழியர்கள் அதிகமாக உள்ளதும் கண்டறியப்பட்டது.
பெரும்பாலும் நீண்ட நாள் சேமித்து வைக்கக்கூடிய உணவுப் பொருள்கள் அதிகம் வழங்கப்படுவதும் தெரியவந்தது. ஆய்வில் பங்கெடுத்தோரில் ஏறத்தாழ 82 விழுக்காட்டினர் செயல்முறைச் சவால்களை எதிர்கொள்வதாகவும் ஆய்வு சுட்டியது. ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு அமைப்புகளில் (67.3%) அதிகபட்சமாக ஒன்பது பணியாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர் என்பதும் 19.2 விழுக்காட்டு அமைப்புகளில் ஊதியம் பெறும் ஊழியர்கள் இல்லை என்பதும் தெரியவந்தன.
தொடர்புடைய செய்திகள்
உணவு விநியோகத்தில் செலவு அதிகரிப்பது பற்றியும் திட்டங்களின் நிலைத்தன்மை குறித்தும் கவலைகள் நிலவுவதாக ஆய்வு தெரிவித்தது.
ஆய்வில் பங்கெடுத்தோரில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறினர். இந்நிலையில் அத்தகைய பணிகளில் சிரமங்களை எதிர்கொள்ள மூன்று முக்கிய வழிகளை அவர்கள் ஆராய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
முதலில், உணவுப் பொருள்களின் தொடர்பில் தேவையுள்ள குடும்பங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பது, வளங்கள் சரியானோரைச் சென்றடைய உதவுகிறது. அதற்கு, கடந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்ற ‘தேவைகள் குறித்த தகவல் தொகுப்பைப்’ பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.
அடுத்து, நிலைத்தன்மை இலக்குகளைச் சமூக ஆதரவுடன் ஒருங்கிணைக்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்து, உணவு வீணாவதைத் தடுத்து, உபரி உணவின் விநியோகத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.
இறுதியாக, உதவி வழங்குவோர் தங்களின் சொந்தச் சேமிப்பு, போக்குவரத்தைச் சார்ந்துள்ள நிலையில், அமைப்புகளுக்கிடையே வளங்களையும் கட்டமைப்புகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் விநியோகச் செலவுகளைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
நடைமுறைச் சாத்தியக்கூறுகளையும் தடைகளையும் கண்டறிந்து, அவற்றைச் செம்மைப்படுத்த ஏதுவாக மூன்று பரிந்துரைகளைச் சோதித்துப் பார்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொதுமக்களும் பெருநிறுவனங்களும், உணவுப்பொருள், நன்கொடைகள் வழங்குவதோடு, அவற்றைப் பெறுவோர்க்குச் சரியான நேரத்தில் திறம்படக் கொண்டுசேர்க்கும் உள்கட்டமைப்பு, வளங்கள் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிப்பது பணியை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“இந்தக் கண்டுபிடிப்புகள், இன்னும் திறம்படச் செயல்படுவதற்கு, எங்களிடம் சரியான உள்கட்டமைப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று காட்டியுள்ளன. தொண்டு நிறுவனப் பங்காளிகள், நன்கொடையாளர்கள் என வெவ்வேறு அமைப்புகளுடன் செய்யும் பணிகள் வேறுபட்டவை. எனினும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் இன்னும் திறம்பட இயங்க முடியுமென நம்புகிறோம்,” என்றார் சிங்கப்பூர் உணவு வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்தர் சின்.
“முதல் இரண்டு ஆய்வறிக்கைகள், மக்களின் தேவைகளையும் அனுபவங்களையும் தொகுத்தது. இந்த மூன்றாவது அறிக்கை உதவி வழங்குவோரின் கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளது,” என்றார் ஆய்வின் முதன்மை ஆய்வாளர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகத்தின் முனைவர் சியா லே ஹூன்.
“இது தொண்டூழியர்களின் அளவும் சமூகம் குறித்த அவர்களின் ஆழமான அறிவும் நமது வலிமை என்பதைக் காட்டியுள்ளது. தரவுகளைச் சிறப்பாகப் பகிர்வதற்கான உள்கட்டமைப்புகளும் ஒருங்கிணைப்பிற்கு உதவும் தளங்களும் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டியது. வழங்குதல் என்பதைத் தாண்டி, அது இன்னும் இலக்கு நோக்கியதாகவும் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்திசெய்யும் வகையிலும் இருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆராய இது உதவும் என நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

