சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகள் (PWDs) வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்வதில் சவால்கள் உள்ளதாகச் செய்தித்தாள் ஒன்றில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.
மனிதவள அமைச்சு ஜூலை மாதத்தில் முதன்முறையாக வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, வேலையில் இருந்த மாற்றுத்திறனாளி குடிமக்களில் நான்கில் ஒருவர் மட்டுமே ஒரே முதலாளியிடம் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் பணிபுரிந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளைப் பணியில் தக்கவைத்துக்கொள்ளும் விகிதங்களுக்கு அனைத்துலக அளவில் தெளிவான அளவுகோல்கள் எதுவும் இல்லை.
இருப்பினும், சிங்கப்பூரின் சொந்தத் தரநிலையை நிறுவுவதற்கும் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் இத்தகைய புள்ளிவிவரங்களை மேலும் விரிவாகக் கண்காணிக்கத் தொடங்குவது மிகவும் முக்கியமானது என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் ஏன் வேலையை விட்டு விலகுகிறார்கள் அல்லது வெவ்வேறு மாற்றுத்திறனாளி பிரிவுகள் மற்றும் தொழில்துறைகளில் வேலையைத் தக்கவைக்கும் விகிதம் மாறுபடுகிறதா என்பனவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நுணுக்கமான கூடுதல் தரவுகள் உதவும்.
உதாரணமாக, ஜப்பானில் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் பணித் தக்கவைப்பு விகிதம் அறிவுசார்ந்த, உடல் சார்ந்த, மனநலம் சார்ந்த அல்லது வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் எனத் தனித்தனியாக வகைப்படுத்தப்படுகிறது.
அந்தப் புள்ளிவிவரம் ஒட்டுமொத்த ஊழியர்களின் சராசரி விகிதத்தைவிடக் குறைவாக உள்ளது என்பதை சிங்கப்பூரின் தேசிய மாற்றுத்திறனாளர் அமைப்பான ‘எஸ்ஜி எனேபிள்’ ஒப்புக்கொண்டது.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தரவுகளின்படி, உள்ளூர் ஊழியர்களில் 85 விழுக்காடு முதல் 89 விழுக்காடு வரையிலானவர்கள் ஒரே முதலாளியிடம் குறைந்தபட்சம் ஓராண்டாவது பணிபுரிகின்றனர்.
“சில மாற்றுத்திறனாளிகள் மட்டுமே நிலையான வாழ்க்கையை உருவாக்கும் விதமாக ஒரே முதலாளியிடம் நீண்ட காலம் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன,” என்று எஸ்ஜி எனேபிள் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அக்டோபர் 4ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய ஆதரவு நடவடிக்கைகளை அறிவித்த அரசாங்கப் பணிக் குழுவின் திட்டங்களில், பணியிடத்தில் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது ஒரு முக்கிய கவலையாக இருந்தது.
2022ஆம் ஆண்டின் செயல்திறன் பெருந்திட்டத்திற்குப் பிறகு, மாற்றுத்திறனாளிகளைப் பணிக்கு அமர்த்துவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட்டது; இத்திட்டம் 2030ஆம் ஆண்டிற்குள் 40 விழுக்காட்டு மாற்றுத்திறனாளி குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதைத் தெளிவான இலக்காகக் கொண்டிருந்தது.
அதில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2018/2019 ஆண்டுகளில் 28.2 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் 2024/2025ல் 34.7 விழுக்காடாக அதிகரித்தது.
