கடந்த 70 ஆண்டுகளாகச் சிறார்களை மகிழ்வித்துவரும் ‘ஸ்னூப்பி’ உள்ளிட்ட ‘பீனட்ஸ்’ (Peanuts) கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் சாங்கி விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.
வரும் ஜூலை 12ஆம் தேதி வரை சாங்கி விமான நிலையத்தில் இந்தக் கதாபாத்திரங்களைச் சார்ந்த அலங்காரங்களும் விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.
உலகப் புகழ்பெற்ற ‘ஸ்னூப்பி’ நாய்க்குட்டியைச் சித்திரிக்கும் அலங்காரங்கள், இதற்கு முன்னதாக 2022ல் விமான நிலையத்தில் இடம்பெற்றன.
இப்போது ‘ஸ்னூப்பி’யுடன் ‘பெல்’, ‘ஆண்டி’, ‘ஸ்பைக்’, ‘ஓலஃப்’ ஆகிய கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தக் கதாபாத்திரங்கள் யாவும் வெவ்வேறு விளையாட்டுகளில் கைதேர்ந்தவையாக இருக்கின்றன.
மூன்றாம் முனையப் புறப்பாட்டுக் கூடத்தின் இரண்டாவது மாடியில், ஐந்து மீட்டர் உயர ‘ஸ்னூப்பி’யுடன் பெரிய காற்பந்து ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணப் பதிவிற்கான வரிசை 11ல் பிள்ளைகள் சென்று விளையாடலாம். சறுக்குப் பலகைகள், குதித்து ஆடுவதற்கு மெத்தை எனப் பல்வேறு விளையாட்டுகள் அங்கு அவர்களுக்குக் காத்திருக்கின்றன.
வண்ணமயமான இந்த விளையாட்டு வளாகத்திற்குள் நுழைவதற்குக் கட்டணம் உண்டு. புகைப்படங்கள் எடுக்கத்தக்க இடங்களை முனையம் 3ன் கீழ்த்தளம் 2ல் வருகையாளர்கள் காணலாம்.
கோல்வலையுடன் கூடிய சிறிய புல்திடல் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்விளையாட்டு மோகம் அவர்களைத் தொற்றிக்கொண்டால் அங்கு அவர்கள் ஆசைதீர விளையாடலாம்.
அத்துடன், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் உள்ள ‘அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்’க்கில் குதூகலத்தையும் வேடிக்கையையும் அள்ளித் தெளிக்க ‘ஹாப்பிடன்புய்’ கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
அந்தப் பூங்கா முழுவதும் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படத் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன்மூலம், விறுவிறுப்பான நீர்ச்சறுக்குகள், ‘ஸ்நோர்க்கெலிங்’ (snorkelling) ஆகியவற்றுக்கும் இடையே நின்று புகைப்படம் எடுத்து மகிழலாம்.
2020ல் அறிமுகமான இந்த ‘ஹாப்பிடன்புய்’ குழுவில், சான்ரியோ (Sanrio) நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆறு கதாபாத்திரங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

