எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துப் பாதைகள் இரண்டில், ஆறு தானியக்கப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது. பேருந்துச் சேவைகள் 400, 191 ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருந்தது.
பொதுப் பேருந்துச் சேவைகளில் இத்தகைய பேருந்துகளைப் பரவலாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறிய அளவிலான பயன்பாடுகளை முதலில் சோதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
நிறுவன ஊழியர்களுக்கான பேருந்துச் சேவைகள் போன்ற குறிப்பிட்ட பயணிக் குழுக்களுக்கான சேவைகளில் தானியக்கப் பேருந்துகளைப் பயன்படுத்துவது குறித்துத் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
திட்டமிட்டபடி ஆறு தானியக்கப் பேருந்துகளும் ஏற்கெனவே சிங்கப்பூர் வந்தடைந்துவிட்டன. அவற்றில் மார்ச் மாதத்தில் வந்த முதல் பேருந்து, குறுகிய தொலைவுச் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய ஐந்து பேருந்துகளும் அந்தச் சோதனைக்காகத் தற்போது தயாராகி வருகின்றன.
முன்னதாக, மரினா பே, ஷென்ட்டன் வே, ஒன்-நார்த் ஆகிய இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு இப்பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பொதுப் பேருந்துச் சேவைகளில் தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகளையும் அதன் செயல்பாடுகளையும் மதிப்பிடுவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பேருந்துகளில் பாதுகாப்பு அதிகாரிகளாகப் பேருந்து ஓட்டுநர்கள் பணியிலிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
