வட்ட ரயில் பாதை சேவையில் மாற்றம்: இடைவழிப் பேருந்துகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

2 mins read
b603b8b6-808c-4ce7-a53d-cd23ff403ae0
சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் இடைவழிப் பேருந்துச் சேவை குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகளைப் பார்வையிட்ட தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வட்ட ரயில் பாதை சேவையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 19ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் நடப்பில் இருக்கும்.

மவுண்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் ஆகிய எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால் வட்ட ரயில் பாதை சேவையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

எனவே, இடைவழிப் பேருந்துகளைப் பயன்படுத்தும்படி பயணிகளைத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்வும் அதிகாரிகளும் ஊக்குவிக்கின்றனர். இதற்காக ஒவ்வோர் உச்சவேளையின்போதும் 44 ஈரடுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

இப்பேருந்துகள் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பாய லேபார் நிலையத்துக்கும் தை செங் நிலையத்திலிருந்து பீஷான் நிலையத்துக்கும் தை செங் நிலையத்திலிருந்து சிராங்கூன் நிலையத்துக்கும் சேவை வழங்கும்.

பாய லேபார் நிலையத்துக்கும் ஸ்டேடியம் நிலையத்துக்கும் இடையே இடைவழிப் பேருந்துகள் சேவை வழங்கும்.

மேலும், சேவை மாற்றம் செய்யப்பட்டதும் சில நாள்களுக்குப் பயணிகளிடையே குழப்பம் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு நாளும் 500 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) காலை சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்துக்குத் திரு சியாவ் சென்றார். பயணிகள் மூன்று மாத காலத்திற்கான தங்கள் பயண ஏற்பாடுகளை மாற்றி அமைப்பது எளிதன்று என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், இடைவழிப் பேருந்துகளைப் பயன்படுத்தி அவ்வாறு செய்வது தங்களுக்கு உகந்ததாக உள்ளதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

ஜனவரி 5ஆம் தேதி இடைவழிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பொதுப் போக்குவரத்துப் பிரிவின் மூத்த குழும இயக்குநர் திரு இயோ டெக் குவான் கூறினார்.

இடைவழிப் பேருந்துச் சேவைகள் தொடங்கப்பட்டது முதல் ஒரு வாரத்துக்குள் ஏறத்தாழ 6,000 பயணிகள் அவற்றைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்