சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் (community care apartments) என்றழைக்கப்படும் உதவியுடன் வாழ வகைசெய்யும் வீடுகளுக்கான தேவை இப்போது நிலைமைக்கேற்ப மாறியுள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை (செப்டம்பர் 9) நாடாளுமன்றத்தில் கூறினார்.
வீடமைப்பிலும் பராமரிப்புச் சேவைகளிலும் மூத்தோருக்கு இப்போது கூடுதல் தெரிவுகள் மேலும் எளிதில் கிடைப்பது அதற்குக் காரணம் என்றார் அவர்.
சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள், வீடமைப்பையும் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளையும் இணைக்கும் பல்வேறு தெரிவுகளில் ஒன்று என திரு டான் குறிப்பிட்டார். அதேவேளை, மூத்தோர் அனைவருக்கும் இது சரியான தீர்வாக இருக்காது என்றும் அவர் சுட்டினார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி
பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளுக்கான தேவை குறைந்ததைப் பற்றி இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங்கும் புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவாவும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து சமூகப் பராமரிப்பு வீட்டுத் திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. அவற்றில் புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்டவுன் ஆகியவற்றில் அமைந்துள்ள முதல் இரு திட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் அளவுக்கதிகமாகச் சேர்ந்தன.
ஆனால், அதற்குப் பிறகு பிடோக், கேலாங், செங்காங் ஆகியவற்றில் அமைந்த புதிய திட்டங்களில் இருக்கும் வீடுகளைவிட குறைவான விண்ணப்பங்களே சேர்ந்தன.
அந்த ஐந்து திட்டங்களில் ஒவ்வொரு 10 வீடுகளிலும் கிட்டத்தட்ட ஏழு வீடுகள் அந்தந்த வீட்டுத் தெரிவு நடவடிக்கை முடிவதற்குள் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டதாக திரு டான் தெரிவித்தார். ஆக அண்மைய திட்டமான செங்காங்கில் அமைந்துள்ள திட்டத்தில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தேவை குறைந்திருப்பதால் சமூகப் பராமரிப்பு வீட்டுத் திட்டங்கள் தொடங்கப்படுவது குறைத்துக்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
முன்பு தெரிவிக்கப்பட்ட இலக்கு
முன்னதாக 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் 30 சமூகப் பராமரிப்பு திட்டங்கள் வரை தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இப்போது புதிய இலக்கு ஏதும் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

