கல்வியறிவு, ஆய்வுப் பாடம் 2027ஆம் ஆண்டுமுதல் மாற்றங்காணவிருக்கிறது. அந்தப் பாடம் 2006ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவாற்றலின் இயல்பு குறித்தும் அறிவியல், மானுடவியல், அழகியல் போன்ற துறைகளில் அறிவாற்றல் எவ்வாறு அமைகிறது என்பது குறித்தும் ஆராயும் அந்த ‘எச்2’ பாடத்தை, சிங்கப்பூரின் மேல்நிலைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் படிக்கின்றனர்.
அது தற்போது ஐந்து தொடக்கக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. யூனோயா தொடக்கக் கல்லூரி, ஹுவா சொங் கல்விநிலையம், தேசிய தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் கல்விநிலையம், தெமாசெக் தொடக்கக்கல்லூரி ஆகியவையே அவை.
ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 100 மாணவர்கள் அந்தப் பாடத்தில் மேல்நிலைத் தேர்வு எழுதுகின்றனர். அந்த எண்ணிக்கை எவ்வித மாற்றமுமின்றி நிலையாக இருந்து வருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கல்வி அமைச்சு தெரிவித்தது.
புதிய பாடத்திட்டம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அப்பாடத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக அமைச்சு கூறியது.
அது, அறிவாற்றலையும் மனசாட்சியையும் மையமாகக் கொண்ட புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது. மாணவர்கள் கேள்விகளை மேலும் ஆழமாக ஆராய்வதும் அறிவாற்றலை நெறியான முறையில் பயன்படுத்துவது தொடர்பான புரிதலை வலுப்படுத்துவதும் அதன் நோக்கம்.
“செயற்கை நுண்ணறிவு, மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவாற்றலுக்கும் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட அறிவாற்றலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறைத்துவரும் இன்றைய உலகிற்கு, இது காலத்திற்கு ஏற்ற பொருத்தமான நடவடிக்கையாகும்,” என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.


