சிரியா ஆட்சிமுறை மாற்றத்தால் மற்ற பகுதிகளிலும் விளைவுகள் ஏற்படும்: ஐஎஸ்டி

2 mins read
dadfaf0a-c742-4948-b710-409b68b66554
சிரியாவில் உள்ள அபாசியின் சதுக்கத்தைக் கடந்து செல்லும் பெண். - படம்: ராய்ட்டர்ஸ்

சிரியாவில் ஏற்பட்டுள்ள தலைகீழான ஆட்சி மாற்றம் உலகின் மற்ற பகுதிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) எச்சரித்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் முக்கிய நகரங்களை ஹயாட் தஹ்ரீர் அல்-ஷாம் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல்-அசாத் ரஷ்யாவுக்குத் தப்பி ஓடினார்.

இதனால் சிரியாவின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயங்கரவாத அமைப்புகளின் கருத்து, தொடர்பு ஆகியவை மத்திய கிழக்கு மற்றும் இவ்வட்டாரம் வரை பரவும் என்று அது கூறியது.

“ஐஎஸ், அல் காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தற்போதைய சிரியா ஆட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆள்களை சேர்த்து புத்துயிர் பெறலாம் என்று திங்கள்கிழமை (டிசம்பர் 23) ஐஎஸ்டி தெரிவித்தது.

“சிரியாவில் தங்களுடைய ஆதரவாளர்களை தங்கள் அணிகளில் சேர அல்லது சிரியாவில் பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டி தாயகத்தில் வன்முறைகளில் ஈடுபட சிலர் அழைப்பு விடுக்கலாம். சிரியாவில் நிலவும் கொந்தளிப்பான சூழலால் பயங்கரவாத, தீவிரவாத அபாயங்கள் அதிகரிக்கக்கூடும்.

சிரியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்த உள்நாட்டுப் போர், அங்கு ஐஎஸ்ஐஸ், அல் காய்தா அங்கீகரித்த அல்-நுஸ்ரா முன்னணி ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு இடமளித்தது என்றது ஐஎஸ்டி.

இரு பயங்கரவாத அமைப்புகளும் போரிடுவதற்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களை ஈர்த்துள்ளன. அது மட்டுமல்லாமல் அவற்றின் சித்தாந்தம், போதனைகள் மலேசியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மாற்றியிருக்கின்றன. அவர்களில் சிலர் சொந்த நாட்டிலேயே தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டனர்.

குறிப்புச் சொற்கள்