வட்ட ரயில் பாதை சேவை நேரத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து நிலையங்களிலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் சேவை முன்கூட்டியே இரவு 11 மணிக்கு நிறுத்தப்படும். மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்குத்தான் சேவை தொடங்கும்.
அடுத்த ஆண்டின் (2026) முற்பாதியில் வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டம் திறக்கப்படவிருக்கிறது. அதற்குமுன் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பைச் சோதிப்பதற்குத் தேவையான நேரத்தை வழங்குவதற்காக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தன.
அக்டோபர் 3, 4, 5, நவம்பர் 28, 29, 30, டிசம்பர் 5, 6, 7 ஆகிய வாரயிறுதி நாள்களுக்கு இந்தச் சேவை மாற்றங்கள் பொருந்தாது. அந்த நாள்களில் ரயில் சேவை வழக்கம்போலச் செயல்படும்.
ஆறு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகளை அடுத்துக் கடந்த ஜூலை மாதம் புதிய ஒருங்கிணைந்த கண்காணிப்புக் கட்டமைப்பை நிறுவுவதற்கான பணிகள் நிறைவுபெற்றதாக ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் தெரிவித்தன.
வட்ட ரயில் பாதையில் மின்விநியோகம், தொடர்பு, நிலைய வசதிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் நிர்வகிப்பதும் இந்தக் கட்டமைப்பின் பணிகள்.
ரயில் நிலையங்கள், கட்டுப்பாட்டு நிலையங்கள், ரயில்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புக்கு இது ஆதரவு வழங்குகிறது.
அடுத்த கட்டமாக, வட்ட ரயில் பாதை முழுவதிலும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பைச் சோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த ரயில் பாதையின் ஆறாம் கட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு நம்பகமான ரயில் சேவையை உறுதிசெய்வதற்கு இந்தச் சோதனைகள் அவசியம் என்று ஆணையமும் நிறுவனமும் தெரிவித்தன.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடப்பிலிருக்கும் சேவை நேர மாற்றத்தைக் கருத்தில்கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இதர பெருவிரைவு ரயில் சேவைகளையும் பேருந்துச் சேவைகளையும் அவர்கள் நாடலாம்.
ரயில் சேவை தாமதமாகத் தொடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 9 மணி வரை பெரும்பாலான வட்ட ரயில் பாதை நிலையங்களிலிருந்து பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் கூறின.