சிறிய மின்சார சரக்கு வாகனங்களுக்கான உரிமத்தில் மாற்றங்கள்

சிறிய மின்சார சரக்கு வாகனங்களுக்கான உரிமத்தில் மாற்றங்கள்

2 mins read
f9d0649d-81c4-4ebc-90b4-10200469fae1
சிங்கப்பூர், 2040ஆம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாற இலக்கு கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 3 அல்லது 3A பிரிவில் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்போர், குறைந்த எடையிலான பொருள்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் அனைத்துவித சிறிய மின்சாரச் சரக்கு வாகனங்களையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள், 3,000 கிலோகிராம் எடைக்கு உட்பட்ட சிறிய மின்சாரப் பேருந்துகளையும் ஓட்ட முடியும். இதற்குமுன், அத்தகையோர் 2,500 கிலோகிராம் எடைக்கு உட்பட்ட மின்சாரப் பேருந்துகளை மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்பட்டனர்.

புதிய மாற்றங்கள் ஜூன் 15ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகின்றன.

சிங்கப்பூர், 2040ஆம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாற இலக்கு கொண்டுள்ளது. அதை ஆதரிக்கும் விதத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) குறிப்பிட்டது.

சிறிய மின்சாரச் சரக்கு வாகனங்களும் எரிபொருள் வாகனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சொன்னது.

அதன் அடிப்படையில், 3 அல்லது 3A பிரிவில் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்போர் சிறிய மின்சாரச் சரக்கு வாகனங்களை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பிரிவின்கீழ் ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்போர், சிறிய மின்சாரச் சரக்கு வாகனங்களையும் சிறிய மின்சாரப் பேருந்துகளையும் இயக்க கூடுதலான ஒப்புதல்களைப் பெறவேண்டிய அவசியமில்லை.

அவர்களின் ஓட்டுநர் உரிமங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது.

இருப்பினும், 3,000 கிலோகிராமுக்குக் கூடுதலான எடைகொண்ட பெரிய மின்சாரச் சரக்கு வாகனங்களை ஓட்ட 4 அல்லது 4P ஓட்டுநர் உரிமத்தை ஓட்டுநர்கள் வைத்திருக்கவேண்டும்.

அத்தகைய பெரிய மின்சார வாகனங்களை 3 அல்லது 3A பிரிவில் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்போர் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை.

அவ்வாறு ஓட்டுவோர் பிடிபட்டால் மூவாண்டுவரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்