முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச் சந்தையில் மாற்றங்கள் அவசியம்: துணைப் பிரதமர் கான்

1 mins read
9d021197-aff9-4ccb-86f2-a444e82b6f31
சிங்கப்பூர் பங்குச் சந்தை 2017ஆம் ஆண்டு முதல் சிறப்பான ஆண்டு வருவாயை ஈட்டி வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள மற்றும் புதிதாக பட்டியலிட விரும்பும் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டி உள்ளதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார்.

பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சியைக் கட்டிக்காக்கும் அதேநேரம் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும் அந்த மாற்றங்கள் அவசியம் என்றார் அவர்.

சிங்கப்பூர் பங்குச் சந்தை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறப்பான ஆண்டு வருவாயை ஈட்டி வருகிறது. இருப்பினும், 2024ஆம் ஆண்டு பங்கு வெளியீடு (IPO) மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிலேயே இருந்தன.

இந்நிலையில், சிங்கப்பூர் பங்குச் சந்தையின் 25வது ஆண்டு நிறைவையொட்டியும் புத்தாண்டின் முதல் வர்த்தக நாளைக் குறிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்று திரு கான் உரையாற்றினார்.

“பங்குப் பரிவர்த்தனைகளும் பங்கு வர்த்தகமும் எல்லைதாண்டிய அளவில் விரிவடைந்து வரும் நிலையில், பணப்புழக்கம் அதிகம் உள்ள வெளிநாட்டுச் சந்தைகளில் இடம்பெற நிறுவனங்கள் விரும்புவதில் வியப்பு ஒன்றும் இல்லை,” என்றார் அவர்.

மேலும் திரு கான் கூறுகையில், “நிறுவனங்களின் வரலாற்றை ஆராய்ந்து அவற்றை ஈர்க்கும் வகையில் சலுகைகளை சிறப்பான முறையில் மாற்றியமைக்க வேண்டும். சிங்கப்பூரில் பட்டியலிடுவதைப் பரிசீலிக்கும் வகையில் அவை இருக்க வேண்டும். மேலும் உள்ளூர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்களைத் தொடங்க நிதி மேலாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்