பறவைகள் மோதி விழுவதைத் தடுக்க என்டியு கட்டடத்தில் மாற்றம்

பறவைகள் மோதி விழுவதைத் தடுக்க என்டியு கட்டடத்தில் மாற்றம்

2 mins read
c46f1aba-d3b5-4b23-a1ad-c2c190471953
மாணவர்களால் அடையாளம் காணப்பட்ட மிக ஆபத்தான கிட்டத்தட்ட 800 சதுர மீட்டர் கண்ணாடிப் பலகைகளில், வடிவமைக்கப்பட்ட ஒட்டுப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) ஆகஸ்ட் மாதம் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், அங்குள்ள கட்டடம் ஒன்றில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் பல்லாண்டுகால தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அது நடந்துள்ளது.

மேற்கு நீர்ப்பிடிப்புப் பகுதியின் வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள கலை, வடிவமைப்பு, ஊடகப் பள்ளிக் கட்டடம் 2006ல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, அதன் மினுமினுக்கும் கண்ணாடிகளில் பலவிதமான பறவைகள் மோதி விழுவதை மாணவர்கள் கண்டுள்ளனர்.

கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பங்களுக்கும் சுற்றியுள்ள இயற்கைச் சூழலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பறவைகளால் கண்டறிய முடியாமல் போனதே அதற்குக் காரணம்.

அதிர்ஷ்டவசமாகச் சில பறவைகள் அந்த மோதலிலிருந்து தப்பிப் பிழைத்தாலும், துரதிர்ஷ்டவசமாகப் பல பறவைகள் படுகாயமடைந்தும் அக்கட்டடத்தின் முற்றத்தில் உள்ள குளத்தில் விழுந்தும் உயிரிழந்தன.

நகரமயமாக்கல் இயற்கை வாழ்விடங்களை ஆக்கிரமித்து வரும் இக்காலத்தில், உலகம் முழுவதும் ஏற்படும் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே அவற்றின் உயிரிழப்புகளும் அமைகின்றன.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் கட்டடங்களில் மோதி உயிரிழக்கின்றன.

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டிலிருந்து பதிவான பறவைகளின் இறப்புச் சம்பவங்களில், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் மோதி உயிரிழந்ததே முதன்மைக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், அத்தகைய உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் ‘புரோஜெக்ட் எவிகேட்’ என்ற மாணவர்கள் வழிநடத்தும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது.

அதன்படி, கலை, வடிவமைப்பு, ஊடகப் பள்ளிக் கட்டடத்தின் கண்ணாடிகளில் பறவைகள் மோதுவதைத் தடுக்கும் ஒட்டுப்படங்களைப் பொருத்துமாறு இன்னாள், முன்னாள் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

‘புரோஜெக்ட் எவிகேட்’ நிதி திரட்டு முயற்சி மற்றும் என்டியு இணைந்து வழங்கிய $119,009.92 நிதி உதவியின் மூலம், மாணவர்களால் அடையாளம் காணப்பட்ட மிக ஆபத்தான கிட்டத்தட்ட 800 சதுர மீட்டர் கண்ணாடிப் பலகைகளில் தற்போது அந்த வடிவமைக்கப்பட்ட ஒட்டுப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு மாதம் நீடித்த அந்த ஒட்டுப்படங்களைப் பொருத்தும் பணிகள், ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்தன.

குறிப்புச் சொற்கள்