டென்னிஸ் மைதானங்கள் முன்பதிவில் மாற்றம்: ஆர்வலர்கள் கோரிக்கை ஏற்பு

டென்னிஸ் மைதானங்கள் முன்பதிவில் மாற்றம்: ஆர்வலர்கள் கோரிக்கை ஏற்பு

2 mins read
37344f97-a571-45e1-8e1b-9109d6ed23a2
சிங்கப்பூர் டென்னிஸ் சங்கம் இனிவரும் காலங்களில் அதன் தேசியக் குழுக்களுக்கான பயிற்சிகளைக் காலாங் டென்னிஸ் மையத்தில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. - படம்: காலாங் குழுமம்

டென்னிஸ் மைதானங்களை பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்று சிங்கப்பூர் விளையாட்டு அமைப்பான ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி (SportSG), சிங்கப்பூர் டென்னிஸ் சங்கம் (STA), காலாங் குழுமம் (The Kallang Group) ஆகிய மூன்றும் சனிக்கிழமை (ஜூலை 18) கூட்டாகத் தெரிவித்துள்ளன.

டென்னிஸ் ஆர்வலர்கள் பலர் முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து அடிக்கடி அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

முன்பு சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் என்ற பெயரில் இயங்கிய டென்னிஸ் விளையாட்டுக்கான வசதிகளை தற்போது காலாங் குழுமம் நிர்வகித்து வருகிறது.

புதிய முன்பதிவுக்கான மாற்றங்களின்படி, டென்னிஸ் விளையாடும் வசதிகள் அனைவருக்கும் உகந்த வகையில் விரிவாக அமைக்கப்படும் என்று அந்த மூன்று அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

டென்னிஸ் விளையாட்டுஆர்வலர்களில் ஒருவரான லெஸ்லி இங் என்பவர் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நகைமுரணான காணொளி ஒன்றை பதிவிட்டார்.

அதில் இயண்முறை சிகிச்சையாளராக பணியாற்றும் அவர் “உலகிலேயே மிகக் கடினமான செயல், சிங்கப்பூரில் டென்னிஸ் மைதானத்துக்கு முன்பதிவு செய்வதுதான்,” என்று டிக்டாக்கிலும் இன்ஸ்டகிராமிலும் கருத்துரைத்தார்.

காலாங் டென்னிஸ் மையத்தைப் பின்னணியில் கொண்ட காணொளியில் அவர், அன்றையதினம் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை சிங்கப்பூர் டென்னிஸ் சங்கம் அங்குள்ள அனைத்து மைதானங்களையும் முன்பதிவு செய்துவிட்டதாகவும் ஆனால் அவற்றை யாரும் அதுவரை பயன்படுத்தவே இல்லை எனவும் குறைபட்டுக்கொண்டார்.

அந்த காணொளி அன்று மாலை 5.30 மணியளவில் பதிவுசெய்யப்பட்டது. பயன்படுத்தாத மைதானங்களை பிறருக்கு விட்டுக்கொடுக்கலாமே என்றும் அவர் காணொளியில் கோரிக்கை வைத்தார்.

குறிப்புச் சொற்கள்