சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்தில் கட்டுமானப் பணிகளுக்கு $4.75 பில்லியன் மதிப்புள்ள இரண்டு குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மே மாதப் பிற்பாதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்மைப் பயணிகள் முனையத்தின் அடித்தளமும் கீழ்த்தளங்களும் கட்டுமானப் பணிகளில் அடங்கும் என்று விமான நிலையத்தின் செயல்பாட்டு நிறுவனம் திங்கட்கிழமை (மே 5) தெரிவித்தது.
அந்தக் கட்டுமானப் பணிக்கான $3.8 மில்லியன் மதிப்புள்ள குத்தகை, சீனத் தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளை மற்றும் ஜப்பானின் ஆகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒபயாஷி சிங்கப்பூர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முனையத்தின் அடித்தளத்தையும் முதன்மைப் பயணிகள் முனையத்தில் கீழ்த்தளங்களையும் நிலப் போக்குவரத்து நிலையத்தையும் உருவாக்குவதற்கு அந்தக் கூட்டு நிறுவனம் பொறுப்பு வகிக்கும்.
28 மீட்டர் ஆழம் கொண்ட அடித்தளத்துடன் ஏறக்குறைய 140 ஹெக்டர் பரப்பளவிலான கட்டுமான இடம் கிட்டத்தட்ட 5,200 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்குச் சமம்.
$950 மில்லியன் மதிப்புள்ள மற்றொரு குத்தகை கட்டுமானப் பொறியியல் நிறுவனமான ஹுவா செங் பில்டர் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.
புதிய சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி ஐந்தாம் முனையம். அது சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது ஓடுபாதையைக் கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி விமான நிலையம் இதுவரை மேற்கொண்ட விரிவாக்கத் திட்டங்களில் இதுவே ஆகப் பெரியது.
2030ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஐந்தாம் முனையம், ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 50 மில்லியன் பயணிகள் வரை கையாளும் திறனைக் கொண்டிருக்கும்
ஐந்தாம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது மே தின உரையில் தெரிவித்திருந்தார்.