சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்துச் சேவைகளைப் புதுப்பிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஏறக்குறைய 4 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும்.
அதன் ஒரு பகுதியாக, சாங்கி விமான நிலையத்தின் புகழ்பெற்ற கட்டுப்பாட்டுக் கோபுரமும் புதுப்பிக்கப்படும்.
அதிகரித்துவரும் விமானப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்யவும் ஓர் அனைத்துலக விமானப் போக்குவரத்து நடுவமாகச் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தவும் அந்த முதலீடு செய்யப்படுவதாகச் சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் புதன்கிழமை (ஜூலை 22) தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டுகளில் உலக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மும்மடங்காகும் என்றும் அந்த வளர்ச்சியில் ஏறக்குறைய பாதிக்கு ஆசிய-பசிபிக் வட்டாரம் காரணமாக இருக்கும் என்றும் அனைத்துலகப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு கணித்துள்ளது.
எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான புதிய அமைப்புமுறைகளை உள்ளடக்குவதற்காக, சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் சாங்கி கட்டுப்பாட்டுக் கோபுரத்தைச் சீரமைத்து, சிங்கப்பூர் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தை மேம்படுத்தும்.
அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாளச் சிங்கப்பூர் தரைத்தளத்தில் அதன் வசதிகளை மேம்படுத்திவருகிறது.
இந்நிலையில், “பயணிகளுக்கு மேலும் சுமுகமான, பாதுகாப்பான, நீடித்து நிலைக்கக்கூடிய விமானச் சேவைகளை வழங்க, நாம் ஆகாயச் சேவைகளிலும் நமது ஆற்றலை மேம்படுத்துவது முக்கியம்,” என்று விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஹான் தெரிவித்தார்.
இது, சிங்கப்பூருக்கும் இங்குத் தளம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் விமானத் துறை ஏற்படுத்தும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 80 மீட்டர் உயரமுள்ள அந்தக் கோபுரம், விமான நிலையத்தின் ஆக அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக இருந்தாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அனைவரும் அங்குப் பணியாற்றுவதில்லை. சிலர் சாங்கி கிராமத்திற்கு அருகே உள்ள சிங்கப்பூர் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் பணிபுரிகின்றனர்.
சாங்கி கோபுரம் புதிய அமைப்புமுறைகளைக் கொண்டிருப்பதற்காகப் புதுப்பிக்கப்பட உள்ளது.
புதிய முகப்புப் பகுதி, சாங்கி கோபுரத்திற்கும் ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கும் இடையே ஓர் இணைப்புப் பகுதி ஆகியவையும் அந்தப் புதுப்பிப்புப் பணிகளில் அடங்கும்.
அப்பணிகள் வரும் நவம்பரில் தொடங்கி, 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.

