உலகின் தலைசிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோஹாவின் ஹமது அனைத்துலக விமான நிலையத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி சாங்கி விமானம் நிலையம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஸ்கைட்ரேக்ஸ் ஆலோசனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே பட்டியலில் டோஹாவின் ஹமது விமான நிலையம் முதலிடம் வகித்திருந்தது.
2025 உலக விமான நிலைய விருது விழாவில், உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, உலகின் தலைசிறந்த விமான நிலையக் கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் எனப் பல்வேறு விருதுகளை சாங்கி விமான நிலையம் குவித்துள்ளது.
விருதுகளை வழங்கும் விழா, ஸ்பெயினின் மட்ரிட் நகரில் புதன்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்றது.
இரண்டாம் நிலையில் வந்த டோஹாவின் விமான நிலையத்திற்கு அடுத்து ஜப்பானின் தோக்கியோ ஹனேடா விமான நிலையம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்து, தென்கொரியாவின் இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையம் நான்காம் இடத்தையும் ஜப்பானின் நாரிட்டா அனைத்துலக விமான நிலையம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம் நடத்திய உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
விமான நிலையத்திற்குள் நுழைவது, வெளியேறுவது, ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறுவது, பொருள் வாங்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வில் பங்கேற்ற பயணிகள், தங்களது அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு விமான நிலையங்களைத் தரவரிசைப்படுத்தினர்.
சாங்கி விமான நிலையம், 13ஆவது முறையாக உலகின் தலைசிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றதை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட்வர்ட் பிளெய்ஸ்டெட் தெரிவித்தார்.
இதனுடன் சாங்கி விமான நிலையம் மொத்தம் 697 விருதுகளைப் பெற்று, ஆக அதிக விருதுகளைப் பெற்ற விமான நிலையமாகத் திகழ்வதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

