மூன்று இந்தோனீசிய நகரங்களுக்கு விமானச் சேவை; சாங்கி விமான நிலையம் பரிசீலனை

1 mins read
a885ac61-e7bc-4728-b2fe-479b5d75e62e
இந்தோனீசியாவின் செமாராங், பலெம்பாங், பெலிதுங் ஆகியவற்றில் உள்ள விமான நிலையங்களில் அனைத்துலக விமானச் சேவை வழங்கப்படலாம் என்று அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. - படம்: கருடா இந்தோனீசியா

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவில் உள்ள மூன்று நகரங்களுக்கும் புதிதாக விமானச் சேவை வழங்குவது தொடர்பாக சாங்கி விமான நிலையக் குழுமம் பரிசீலனை செய்து வருகிறது.

மத்திய ஜாவாவில் உள்ள செமாராங், தென் சுமத்ராவில் உள்ள பலெம்பாங், சுமத்ராவின் கிழக்குக் கடற்பகுதியில் உள்ள பெலிதுங் தீவு ஆகியவற்றுக்கான விமானச் சேவை தொடர்பாகத் திட்டமிடப்படுகிறது.

இந்த மூன்று பயணப் பாதைகள் தொடர்பாக விமானச் சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஜூன் 20ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியது.

செமாராங், பலெம்பாங், பெலிதுங் ஆகியவற்றில் உள்ள விமான நிலையங்களில் அனைத்துலக விமானச் சேவை வழங்கப்படலாம் என்று அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து அதுதொடர்பான பேச்சுவார்த்தையை சாங்கி விமான நிலையக் குழுமம் தொடங்கியுள்ளது.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஜூன் 16ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது இருநாடுகளுக்கும் இடையே கூடுதல் விமான இணைப்புகள் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து, சிங்கப்பூருக்கும் மேலும் பல இந்தோனீசிய நகரங்களுக்கும் இடையே விமானச் சேவை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்