சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையம்: பொதுமக்களுக்கு இலவசக் கண்காட்சி

1 mins read
778756e2-8839-43ce-b131-81df0daf0015
சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கான பணிகளை எடுத்துக்காட்டும் கண்காட்சி. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்
multi-img1 of 2

சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்தை அமைப்பதற்கான திட்டங்களை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது.

இக்கண்காட்சியைக் காணப் பொதுமக்கள் இணையத்தில் பதிவுசெய்யத் தொடங்கலாம். கண்காட்சியைக் காண கட்டணம் கிடையாது.

வரும் ஜனவரி மாதம் ஆறாம் தேதியிலிருந்து மார்ச் மாதம் வரை இந்தக் கண்காட்சி, சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் வருகையாளர் நிலையத்தில் இடம்பெறும். கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும் போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் ஆகிய மூன்றும் திங்கட்கிழமை (டிசம்பர் 15) கூட்டறிக்கையில் இத்தகவல்களை வெளியிட்டன.

சாங்கி விமான நிலையத்தின் ஆகப் புதிய முனையமான ஐந்தாம் முனையத்துக்கான திட்டம் எப்படி தலைதூக்கியது, முனையம் எப்படிக் கட்டப்படுகிறது போன்றவற்றை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டும். ஐந்தாம் முனையத்தை 2030களின் நடுப்பகுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கண்காட்சியைக் காண அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம். முதலில் பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பதிவுசெய்யும் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக ஐந்து வருகையாளர்களுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம்.

பதிவுசெய்யாமல் நேரடியாகவும் கண்காட்சிக்குப் போகலாம். காலி இடங்கள் இருப்பதைப் பொறுத்து கண்காட்சியைக் காண அனுமதி வழங்கப்படும்.

கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்