சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையத்தின் வடக்குப் பிரிவு, திட்டமிடப்பட்டதற்கு சில மாதங்கள் முன்பாகவே இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் இரண்டாம் முனையம் ஆண்டுக்கு 28 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலைப் பெற்றிருக்கும்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு இடையே 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது. அப்போது அது ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றிருந்தது.
இரண்டாம் முனையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு சாங்கி விமான நிலையம் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளைக் கையாளும். இப்போது அது ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகளைக் கையாள்கிறது.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று அந்தத் தகவல்களை வெளியிட்டார். ஷாங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 'சாங்கி ஏர்லைன்' விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார்.
புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் முனையத்தின் வடக்குப் பகுதியில் பயணிகள் பல்வேறு புதிய, புத்தாக்க முறையிலான சில்லறை விற்பனை, உணவு, பானக் கடைகள் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம் என்றார் அவர். தனித்துவமான மேம்பட்ட பயண அனுபவத்தைத் தருவதில் அவை கைகொடுக்கும்.
சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையம் சென்ற ஆண்டு மே மாதத்தில் இருந்து கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பிரிவு முழுமையாக சென்ற அக்டோபரில் திறக்கப்பட்டது.
வடக்குப் பிரிவு அடுத்த ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புதுப்பிப்புப் பணிகள் விரைவாக நடப்பதால் இவ்வாண்டு அக்டோபரில் அது திறக்கப்படவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற மாத நிலவரப்படி, 1,102 விமான நிறுவனங்கள் சாங்கி விமான நிலையத்தில் இருந்து உலகின் 145 நகரங்களுக்குச் சேவை வழங்குகின்றன.