நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) ‘கையா’ கட்டட வளாகம், கட்டடக் கலை மற்றும் வடிவமைப்புக்கான யுனெஸ்கோ விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
மரப்பலகையால் கட்டப்பட்ட, ஆசியாவின் ஆகப்பெரிய கட்டடம் கையா (Gaia). 2022ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்விக்கூடம் அமைந்துள்ளது.
உலகின் வனப்புமிக்க வளாகங்கள் பிரிவில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) அது தேர்வு செய்யப்பட்டது.
அந்தப் பிரிவில் விருது வென்ற மற்ற கட்டடங்களில் ஸ்காட்லாந்தின் எடின்பரோ ஃபியூச்சர்ஸ் கல்விக்கழகக் கட்டடமும் ஒன்று. கண்ணைக் கவரும் உட்புறக் கட்டடக் கலைக்கான சிறப்பு விருதை அது வென்றது.
உட்புறக் கட்டடக் கலைக்கான மற்றொரு சிறப்பு விருதை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 வென்றுள்ளது.
உலகின் அழகு ததும்பும் விமான நிலையங்களுக்கான பிரிவில் அது அந்த விருதுக்குத் தேர்வானது.
2020 மே மாதம் முதல் அந்த முனையம் புதிய வசதிகளுடன் பெரிய அளவில் மேம்பாடு செய்யப்பட்டது. அந்த மெருகூட்டும் பணிகள் ஏறத்தாழ மூன்றரை ஆண்டு காலம் நடைபெற்றன.
புதுப்பிக்கப்பட்ட முனையம் 2023 நவம்பரில் திறக்கப்பட்டபோது கூடுதலாக 21,000 சதுர மீட்டர் பரப்பளவு தரைப்பகுதி அதற்குக் கிடைத்தது. அது கிட்டத்தட்ட மூன்று காற்பந்துத் திடல்களுக்குச் சமம்.
‘பிரிக்ஸ் வெர்சாய்ஸ் உலகக் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு விருது 2024’ போட்டித் தொடரில் தேர்வுசெய்யப்பட்ட விருதுகள் அவை.

