தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு; இந்திய நாட்டவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
bbe24af4-f90d-435e-9715-b342b3aa8459
ஏறத்தாழ மூன்று மணி நேரத்தில் நகைகள், சாக்லெட் போன்ற பொருள்களை 37 வயது சாகர் சிங் திருடியதாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

சாங்கி விமான நிலையத்தின் முனையம் மூன்றில், பயணிகள் புறப்பாடு டிரான்சிட் பகுதியில் திருடியதாக இந்திய நாட்டவர் மீது திங்கட்கிழமை (ஏப்ரல் 7) குற்றம் சுமத்தப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மணி நேரத்தில் நகைகள், சாக்லெட் போன்ற பொருள்களை 37 வயது சாகர் சிங் திருடியதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகின.

அவர் திருடியதாகக் கூறப்படும் பொருள்களின் மதிப்பு $1,800க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 23ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் மாலை 4.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சாகர் சிங் பொருள்களைத் திருடியதாக நம்பப்படுகிறது.

முனையம் 3ல் உள்ள டபிள்யூஎச் புத்தகக்கடையிலிருந்து அவர் சில பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

அவற்றின் மதிப்பு $550க்கும் அதிகம்.

அதன் பிறகு தி கோக்கோ ட்ரீ இனிப்புக் கடை உட்பட பல கடைகளுக்குச் சென்றார்.

அங்கு அவர் பல பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

அவற்றில் கிட்டத்தட்ட $238 பெறுமானமுள்ள சாக்லெட்டுகளும் $135 பெறுமானமுள்ள கைப்பையும் அடங்கும்.

சிங்கைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏப்ரல் 25ஆம் தேதியன்று அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சாங்கி விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடியதாக ஏப்ரல் 4ஆம் தேதியன்று ஆஸ்திரேலியரான 35 வயது ராஜ் வர்ஷா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவர் சாங்கி விமான நிலையத்தில் முனையம் 1ல் உள்ள கடையிலிருந்து $248 பெறுமானமுள்ள வாசனைத் திரவத்தைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

வர்ஷா, ஏப்ரல் 11ல் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு திருட்டுக் குற்றச்சாட்டுக்கும் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்