சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான அந்த ஆடவர் இரண்டு வெவ்வேறு கார் நிறுத்துமிடங்களிலிருந்து மோட்டார் சைக்கிள்களின் கண்ணாடிகள் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றைத் திருடினார்.
தமது மோட்டார் சைக்கிளில் உள்ள இரண்டு கண்ணாடிகளும் காணவில்லை என்று மே 12ஆம் தேதி ஒருவர் புகார் கொடுத்தார்.
அதேபோல் மே 15ஆம் தேதி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கார் நிறுத்துமிடத்திலிருந்த தமது தலைக் கவசத்தைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
புகார்களைத் தொடர்ந்து விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை வைத்துச் சந்தேகநபர் அன்றே கைது செய்யப்பட்டார்.
ஆடவரிடம் இருந்து திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன. அவர்மீது சனிக்கிழமை (மே 17) குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
வாகனமோட்டிகள் தங்களது வாகனங்களில் திருட்டைத் தடுக்க உதவும் சில பொருள்களைப் பொருத்திக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர்களது வாகனம் மேலும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினர்.