முழுமையான தானியக்க முறைவழி விமானத்திற்கு இட்டுச் செல்லும் விமானப் பாலம் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்ட பின்னரே பயணிகள் வெளியேறுவதை சாங்கி விமான நிலையக் குழுமம் சோதனைத் திட்டமாக மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானத்தின் கதவைத் தட்டும் சத்தத்துக்காகப் பணியாளர் காத்திருப்பார். பயணிகள் பயன்படுத்துவதற்கான விமானப் பாலம் தயாராக உள்ளது என்பதற்குத் தரைச் செயல்பாட்டுப் பணியாளர்கள் தெரியப்படுத்தும் முறை இருந்து வந்தது.
இருப்பினும், இவ்வாறு விமானத்தின் கதவை ஒருவர் தட்டும் முறைக்குப் பதிலாக விமானப் பாலம் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்டுள்ளது என்பதை விமானத்தின் சன்னல் அருகே வான்பாலத்தில் அமைந்துள்ள ஒரு திரை விமானப் பணியாளர்களுக்குத் தெரியப்படுத்தும்.
ஸ்கூட், பேங்காக் ஏர்வேஸ், கேஎல்எம் ஆகிய நிறுவனங்களின் ஒருசில விமானப் பயணங்களில் வெள்ளிக்கிழமை முதல் இச்சோதனைத் திட்டம் துவங்கும்.
விமானத்தில் உள்ள பயணிகள் விமான நிலையத்தின் முனையத்தை அடைவதற்கான ‘பிஎல்பி’ என்ற இந்த விமானப் பாலம், வெவ்வேறு வடிவங்களும் அமைப்புமுறைகளும் கொண்ட விமானங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படக்கூடியது. விமானத்திற்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில் இந்த ‘பிஎல்பி’, விமானத்தின் மிக அருகில் பொருத்தப்பட வேண்டும்.
தற்போது முழுமையாகத் தானியக்க முறை பயன்படுத்தப்படுவதில்லை. கடைசி 50 சென்டிமீட்டர் அளவுக்குச் செயல்பாட்டுப் பணியாளர் ஒருவர் விமானப் பாலத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வார். பணியாளரின் ஆற்றலைப் பொறுத்து இதற்கு இரண்டு நிமிடங்கள் வரை ஆகலாம்.
இந்த இறுதிப் படியைச் செய்பவர் குறைந்தது 10 மணி நேரப் பயிற்சிக்குச் சென்று தேர்வு ஒன்றிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சோதனையிடப்படும் புதிய தானியக்க முறை, இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் வேலையைச் செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதிய தானியக்க முறைக்காக தற்போதைய செயல்பாட்டுப் பணியாளர் சுமார் மூன்று மணி நேரப் பயிற்சியை மட்டுமே மேற்கொள்வார்.
மனிதவளத் தேவைகளைக் குறைப்பதுடன் விமானப் பாலங்கள் விமானங்களின் மீது மோதும் அபாயத்தை நீக்கி பாதுகாப்பை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் 2017ல் இப்புதிய தானியக்க முறை பரிந்துரைக்கப்பட்டது.

