தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

1 mins read
4fa3deff-eca8-491f-a1be-9bbbe43a2a74
‘ஏர்கிராஃப்ட் 360’ திட்டம் வழி விமான மறுதயாரிப்புச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சாங்கி விமான நிலையம். - படம்: எஸ்பிஎச்

சாங்கி விமான நிலையம் தனது விமான மறுதயாரிப்பு செயல்பாட்டை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் உதவியைப் பயன்படுத்தவுள்ளது.

ஒவ்வொரு விமானமும் தரையிறங்கிய பின்னர், அடுத்த பயணத்திற்கு அதனைத் தயார்செய்யும் மறுதயாரிப்புச் செயல்பாடு விமான நிலையத்தின் விமான நிறுத்துமிடங்களில் இடம்பெறுகிறது.

குறைந்த விமான நிறுத்துமிடங்கள், எதிர்பாரா காலதாமதம், மோசமான வானிலை போன்ற காரணங்களால் இந்தச் செயல்பாடு கடினமான சவாலாக இருந்தாலும் அதனைச் சமாளிக்கத் தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு கூறியது.

அதன் புதிய ‘ஏர்கிராஃப்ட் 360’ திட்டம் கணனிவழி கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப உதவிகளோடு விமான நிறுத்துமிடங்களின் பயன்பாட்டைச் சீராக்கும். 

இத்திட்டம் விமான மறுதயாரிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, விமானம் தரையிறங்குவதில் ஏற்படக்கூடிய காலதாமதங்களை முன்னரே கணிப்பது போன்ற வல்லமைகளைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது என்று சாங்கி விமான நிலையக் குழு கூறியது.

மேலும், இத்திட்டத்தால் பணியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்குக் காலதாமதத்துக்கு ஏற்ப எளிதில் மாற்றிவிடப்படலாம், சாங்கி விமான நிலையத்தின் விமான நேரச் செயல்திறன், பயணிகளின் அனுபவம் ஆகியவையும் மேம்படும் என்று அக்குழு கூறியது.

2024ல் ஐந்து விமான நிறுத்துமிடங்களில் சோதிக்கப்பட்ட இத்திட்டம் நல்ல பலன்களை அளித்ததால் தற்போது இரண்டாம், மூன்றாம் முனையங்களிலும் கூடுதல் சோதனைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் அனைத்து முனையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்போது தற்போதைவிட ஒரு நாளுக்கு கூடுதலாக 12 விமானங்கள் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் வல்லமையை அது பெறுமென நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்