பொதுப் பயனீட்டுக் கழகம் ஜூன் 20ஆம் தேதி, சாங்கி தண்ணீர் மீட்பு ஆலையை விரிவாக்குவதற்கான குத்தகை ஒன்றை அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஆலையின் மூன்றாவது விரிவாக்கம் இது.
அந்த விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அதன் தண்ணீர் சுத்திகரிப்புக் கொள்ளளவு, நாள் ஒன்றுக்கு 96 மில்லியன் கேலன் வரை உயரும். அது, 175 ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் உள்ள நீரின் அளவுக்குச் சமம். விரிவாக்கத்தைத் தொடர்ந்து, கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறைகளில் சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட, நீருக்கு அதிகரித்துள்ள தேவை பூர்த்திசெய்யப்படும் என்று கழகம் கூறியது.
அதோடு, சிங்கப்பூருக்கு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பயன்படுத்தப்பட்ட தண்ணீர் வழங்கீட்டு முறை இருப்பதை அது உறுதிசெய்யும் என்றது கழகம்.
மூன்றாம் கட்ட விரிவாக்கம் 2030களின் நடுப்பகுதியில் நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்புச் செயல்முறையில் இட, எரிசக்திச் செயல்திறன் மிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அந்தத் தொழில்நுட்பம், புதுநீர் உற்பத்திக்கு, மேம்பட்ட தரத்திலான சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட தண்ணீரை உருவாக்கும்.
சாங்கி ஆலையின் தற்போதைய தண்ணீர் சுத்திகரிப்புக் கொள்ளளவு, நாள் ஒன்றுக்கு 224 மில்லியன் கேலன். இரண்டாவது விரிவாக்கத்திற்குப் பிறகு மொத்தக் கொள்ளளவு நாள் ஒன்றுக்கு 246 மில்லியன் கேலனாக இருக்கும்.
சாங்கி ஆலை உட்பட, சிங்கப்பூரில் நான்கு தண்ணீர் மீட்பு ஆலைகள் உள்ளன. அவை, ஜூரோங், உலு பாண்டான், கிராஞ்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர்ப் பயன்பாடு ஏறக்குறைய 440 மில்லியன் கேலனாக உள்ளது. 2065ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்தத் தண்ணீர்த் தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.