போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

2 mins read
b1d24e98-8ea9-4c1b-aacb-6a0cca57430d
‘எட்டோமிடேட்’ போதைப்பொருளை உட்கொண்டு காரை ஓட்டியதாக நம்பப்ப்படும் 34 வயது புவா செ சொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையில் ஆபத்தான முறையில் காரை ஓட்டி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரின் மரணத்துக்குக் காரணமானதாக 34 வயது சிங்கப்பூர் ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மோட்டார்சைக்கிளோட்டியின் பின்னால் அமர்ந்திருந்தவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இதன் தொடர்பில் புவா செ சொங் என்ற ஆடவர்மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் புவா தமது காரை ஆபத்தான முறையில் ஓட்டியதாகக் காவல்துறை தெரிவித்தது.

பின்னர் விரைவுச்சாலைக்கு நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புவா தமது காரை நிறுத்தியதாக நம்பப்படுகிறது.

வழியில் நின்றுகொண்டிருந்த புவாவின் கார்மீது மோதிய 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி கடுமையான காயங்களால் உயிரிழந்தார்.

அவருடன் மோட்டார்சைக்கிளில் இருந்த 28 வயது ஆடவரின் முதுகெலும்பும் கணுக்காலும் முறிந்ததுடன் கல்லீரலிலும் காயம் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து புவா தமது காரில் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 13 மணிநேரம் கழித்து புவாவைக் கைதுசெய்த அதிகாரிகள், ஆடவரின் ரத்தத்தில் எட்டோமிடேட் போதைப்பொருள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

உடனடியாக அவரின் வாகன உரிமம் ரத்துசெய்யப்பட்டது.

போதைப்பொருள் உட்கொண்டபின் வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுவரை சிறை, $5,000 முதல் $20,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடை ஆகிய தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.

ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்கு ஈராண்டிலிருந்து எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

காரைத் திருடியது, காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியது, குற்றவாளியின் உத்தரவின்படி $1.2 மில்லியன் தொகையைப் பெற்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் புவாமீது ஏற்கெனவே சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துபோதைப் பொருள்குற்றச்சாட்டு