மின்சைக்கிளோட்டிமீது வாகனத்தை மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முகம்மது முஸ்தகிம் இஸ்மாயில் என்னும் 35வயது ஆடவர் விபத்திற்குப் பிறகு காரைச் சாலையிலேயே விட்டுத் தப்பியோடியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நவம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிவாக்கில் தெம்பனிஸ் அவென்யூ 7க்கும் தெம்பனிஸ் ஸ்டிரீட் 42க்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் நிகழ்ந்தது.
விபத்தில் 67 வயது சைக்கிளோட்டிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர் அவர் மாண்டார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) முஸ்தகிம்மீது எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தது, தகுந்த உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வாகன உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வாகனத்தை எடுத்துச்சென்றது, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முஸ்தகிம் எதிர்நோக்குகிறார்.
தெம்பனிஸ் அவென்யூ 7ல் சிவப்பு நிறப் போக்குவரத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தபோது முஸ்தகிம் அதைக் கடந்து சென்றுள்ளார். அப்போது மின்சைக்கிளோட்டி தாஹா மூன்மீது மோதினார். திரு தாஹா தெம்பனிஸ் ஸ்திரீட் 42ல் இருந்து வந்துகொண்டிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு (நவம்பர் 26) முஸ்தகிம் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையின்போது முஸ்தகிமுக்கு பிணை வழங்கப்படவில்லை. அவர் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் அதிகம் இருப்பதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் முஸ்தகிம் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது குறித்து நீதிமன்ற விசாரணையில் எடுத்துரைக்கப்பட்டது.
வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
முஸ்தகிம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அவருக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படும்.

