வீவக தரவுகளை ஊடுருவியதாகக் கழகத்தின் முன்னாள் குழு இயக்குநர்மீது குற்றச்சாட்டு

வீவக தரவுகளை ஊடுருவியதாகக் கழகத்தின் முன்னாள் குழு இயக்குநர்மீது குற்றச்சாட்டு

2 mins read
634b902f-5352-45db-b360-803807b5ee96
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வட்டார நிர்வாக, சொத்துப் பிரிவுக்கான குழு இயக்குநராக இருந்த 58 வயது டான் சியூ லிங், வீட்டு நிர்வாகம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளுக்குள் 161ல் அனுமதியின்றி ஊடுருவியதாகக் கூறப்படுகிறது. - படம்: பெரித்தா ஹரியான்

வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் தரவுகளை ஊடுருவி ஏழு கழக வீடுகள் தொடர்பான ஆவணங்களை வைத்துக்கொண்டதாகக் கழகத்தின் முன்னாள் குழு இயக்குநர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கழகத்தின் வட்டார நிர்வாக, சொத்துப் பிரிவுக்கான குழு இயக்குநராகப் பணியாற்றிய 58 வயது டான் சியூ லிங், வீட்டு நிர்வாகம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டத் தரவுகளுக்குள் 161ல் அனுமதியின்றி ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 27, 28ஆம் தேதிகளில் டான் தரவுகளை ஊடுருவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கணினியின் தவறான பயன்பாட்டுக்கானச் சட்டத்தின்கீழ் கணினி ஆவணங்களை அனுமதியின்றி ஊடுருவியக் குற்றச்சாட்டை டான் எதிர்கொள்கிறார்.

2024ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி ஏழு கழக வீடுகள் தொடர்பான ஆவணங்களையும் தகவல்களையும் டான் வைத்துக்கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் அது குற்றமாகக் கருதப்படுகிறது.

கழகத்தில் உள்ள தமது பதவியின் காரணமாக மட்டுமே ஆவணங்களையும் தகவல்களையும் டான்னால் பெற முடிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

பொது வீடமைப்புக் கொள்கைகளை உருவாக்கி அதை அமல்படுத்துவதுடன் வீட்டு விநியோகம், அதன் விலைகள், விற்பனை, மறுவிற்பனை, வீட்டு மானியங்கள், கடன்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் குழுவை டான் மேற்பார்வையிட்டார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் டான்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அக்டோபர் 20ஆம் தேதி டான் நீதிமன்றத்துக்குத் திரும்புவார்.

கிம் கியெட், பாசிர் ரிஸ், டகோட்டா, டாசன் சாலை, பிடோக் நார்த், தெம்பனிஸ், ‌ஷுன்ஃபூ ஆகிய வட்டாரங்களில் உள்ள கழக வீடுகள் குறித்த தகவல்களை டான் நாடினார்.

கழக வீடு ஒன்றின் உரிமத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்துவது தொடர்பான விவரங்களைக் கொண்ட தகவல்கள், டான் வைத்திருந்த ஆவணங்களில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்இயக்குநர்குற்றச்சாட்டு