காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் மீது குற்றச்சாட்டு

காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
10567d22-3690-48e0-9b6d-079376d58ec1
விபத்தின்போது பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் நால்வர் இருந்தனர். அவர்களில் 8 மற்றும் 9 வயதுடைய இரு மாணவர்கள், காரின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட மொத்தம் 6 பேர் சுயநினைவோடு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமா பகுதியில் காரை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்று, பள்ளிப் பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்திய 29 வயது ஆடவர் மீது வியாழக்கிழமையன்று (ஜூன் 18) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில், காவெனாக் சாலையில் கார் ஒன்று போக்குவரத்துத் திசைக்கு எதிர் திசையில் சென்று நின்று கொண்டிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்ததைக் கண்ட அந்த ஆடவர், காரை நிறுத்தாமல் அதை அதிவேகமாக ஓட்டினார். அடுத்த 15 நிமிடங்களில், அந்தப் பகுதியில் மணிக்குக் குறைந்தது 114 கிலோமீட்டர் வேகத்தில், மற்ற வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் கார் அங்கும் இங்கும் நுழைந்து செல்வதைக் காவல்துறையினர் கவனித்தனர். இது அந்தச் சாலையின் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பைவிட மிக அதிகமாகும்.

தொடர்ந்து புக்கிட் தீமா சாலை மற்றும் சிக்ஸ்த் அவென்யூ சந்திப்பில் சிவப்பு விளக்குச் சமிக்ஞையையும் மீறிச் சென்ற அந்த கார், அங்கு ‘யு-டர்ன்’ செய்து கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளிப் பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் இடதுபுறமாகப் பாய்ந்த கார், அங்குள்ள விளக்குக் கம்பத்தில் மோதி புல்வெளியில் நின்று தீப்பற்றியது. காரில் இருந்த ஓட்டுநரும் மூன்று பயணிகளும் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.

இந்த விபத்தின்போது பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் நால்வர் இருந்தனர். அவர்களில் 8 மற்றும் 9 வயதுடைய இரு மாணவர்கள், காரின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட மொத்தம் 6 பேர் சுயநினைவோடு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கார் ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டிலும் அவர் மது அருந்திவிட்டு மற்றவர்களது பாதுகாப்பைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் வாகனம் ஓட்டியது காரணமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்