சிங்கப்பூரின் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு 1,000க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் விடுத்த 37 வயது ஆடவர்மீது புதன்கிழமை (மே 13) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஃபூ ஜியா ஹொங் எதிர்கொண்டார்.
இவ்வாண்டு, ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஃபூ, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 24லிருந்து 425 முறை அழைப்புவிடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஈசூன், பிடோக், கேலாங், அங் மோ கியோ ஆகிய அக்கம்பக்கக் காவல் நிலைய அதிகாரிகள் ஃபூவின் அழைப்பால் பணியைச் சரிவர செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
காவல் நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஃபூ, அதிகாரிகள் அழைப்பை எடுத்தவுடன் மௌனம் காத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
சிங்கப்பூரரான ஃபூ, குற்றம் புரிவதற்காக மற்றொருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டையை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிம் அட்டையை வைத்து அழைப்புகளை விடுத்த ஃபூ, இம்மாதம் 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
ஃபூ, தமது அடையாளத்தை மறைக்க வெளிநாட்டு எண்ணிலிருந்தும் அழைப்புவிடுத்தப் பின் அமைதியாக இருந்ததாகக் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதன்கிழமை (மே 13), மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் ஃபூவைச் சேர்க்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்மாதம் 26ஆம் தேதி ஃபூவின் வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
அரசாங்க ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துவோருக்கு ஆறு மாதம்வரை சிறைத் தண்டனை, $2,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

