அமெரிக்காவின் இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், சீனாவில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளைச் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்ப் பிரகடனம் செய்து ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆடவர்கள் மூவர்மீது வியாழக்கிழமை (ஜூன் 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாக லோ இயூ கோங், 68, லியோங் யூ ஃபோங், 41, லோ சென் சிங் டேரன், 37, ஆகிய மூன்று சிங்கப்பூரர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
‘பிரைட்சர் எட் ரிச்’, ‘பிரைட்சர் எட் ரிச் (இண்ட்)’, ‘ஸெனோவா இன்டர்நேஷனல்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகச் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மெத்தைகள், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்ப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2025 பிப்ரவரியில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அந்த மெத்தைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் அம்பலமானது.
2022 ஆகஸ்ட் முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததை அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். இதில் சம்பந்தப்பட்ட பொருள்களின் ஒட்டுமொத்த மதிப்பு $23 மில்லியனுக்கும் அதிகம் என்று சுங்கத்துறை குறிப்பிட்டது.
அப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மெத்தைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் கடுமையான வரிகளை விதித்திருந்தது.

