சிங்கப்பூரிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துகளை ‘டிக்டாக்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக 27 வயது இளையர்மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான எல்வின் ஜான் பாப்டிஸ்ட் என்ற அந்த ஆடவர், சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ், பிறரின் சமயத்தை அவமதித்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
முஸ்லிம் சமயத்தை அவமதிக்கும் என்றும் சிங்கப்பூரின் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்றும் தெரிந்தே, கடந்த மார்ச் 1ஆம் தேதி மலாய் மொழியில் இரு டிக்டாக் காணொளிகளைப் பாப்டிஸ்ட் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
காணொளிகள் பதிவேற்றப்பட்ட அதே நாளில் பாப்டிஸ்ட்மீது புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் புகார் செய்வதற்கு முன்பே சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாகவும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) காவல்துறை தெரிவித்தது.
மலேசியக் காவல்துறையின் உதவியுடன், ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அதே நாளில் சிங்கப்பூர் வந்தடைந்த அவரைச் சிங்கப்பூர்க் காவல்துறை கைது செய்தது. திருக்குர்ஆனை ஒருவர் மிதிப்பது போல் சமூக ஊடகங்களில் பரவி வரும் வேறொரு காணொளி தொடர்பான காவல்துறையின் விசாரணையிலும் பாப்டிஸ்ட் உதவி வருகிறார்.
அந்தக் காணொளி சிங்கப்பூரின் பொதுப் பேருந்து ஒன்றில் படம்பிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள மெட்டா தளத்தின் பயனாளர்கள் சமூக ஊடகத்தில் வெளியான அந்தத் தகாத காணொளியைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில், மெட்டா நிறுவனத்துக்கு உடனடியான செயலிழக்கச் செய்யும் உத்தரவைக் காவல்துறை மார்ச் 7ஆம் தேதி பிறப்பித்தது.
மருத்துவப் பரிசோதனைக்காகப் பாப்டிஸ்ட் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய வழக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


