தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கம்போடிய மோசடி மையத்துடன் தொடர்பு

குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் மூவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
05c77ec8-cfb9-4971-95d1-93614bf325b5
சிங்கப்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையையும் காவல்துறை உளவுத்துறையையும் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹோட்டல் அறைகள் போன்ற பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கம்போடியாவிலிருந்து செயல்பட்ட மோசடிக் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடிக் கும்பல், $40 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய தொகை இழப்புடன், அதில் சம்பந்தப்பட்ட குறைந்தது 330 சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஜஸ்டின் சென் ஜுன்சி, 25, சான்டன் லிம் யூ ஹான், 27, காலர்ன் லிம் யுவான் ஜின், 33, ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மூன்று சிங்கப்பூர் ஆடவர்கள்.

கம்போடியாவின் நோம் பென் நகரில் ஒரு மோசடி மையத்திலிருந்து இந்த மோசடிக் கும்பல் செயல்பட்டதாகவும் ஆனால் சிங்கப்பூரில் உள்ளவர்களை இது குறிவைத்ததாகவும் காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மற்ற 12 பேர்மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களில் ஒன்பது சிங்கப்பூரர்கள், இரண்டு மலேசியர்கள், ஒரு பிலிப்பினோ பெண் ஆகியோர் அடங்குவர்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த 15 பேரும் உள்ளூர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் வழக்கு செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூரில் மோசடிகளுக்குக் காரணமான இந்தக் கும்பலைக் கலைப்பதற்கு, கம்போடிய தேசிய காவல்துறையுடன் இணைந்து தான் செயல்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை, காவல்துறை உளவுத்துறை இவ்விரண்டைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹோட்டல் அறைகள் போன்ற பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

நோம் பென் நகரில் உள்ள ஒரு கட்டடத்திலும் ஒரு கிடங்கிலும் கம்போடிய தேசிய காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு சோதனை நடத்தியபோது, மோசடிக் கும்பல் பயன்படுத்தி இருக்கக்கூடிய மின்னணுச் சாதனங்களும் உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டன.

குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி போன்ற பொருள்களைத் திடீர் சோதனையின்போது அதிகாரிகள் கைப்பற்றினர்.
குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி போன்ற பொருள்களைத் திடீர் சோதனையின்போது அதிகாரிகள் கைப்பற்றினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வங்கிக் கணக்குகள், மின்னிலக்க நாணயக் கருவிகளிலிருந்து $2.5 மில்லியன் மதிப்புள்ள நிதி, குற்றங்கள் புரியப் பயன்படுத்தப்பட்ட உரை நகல்கள் போன்ற பொருள்களைக் கூட்டு நடவடிக்கையின்போது அதிகாரிகள் கைப்பற்றினர் என்று சிங்கப்பூர் காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்