கேலாங்கில் மிகவும் பிரபலமான ‘எமினண்ட் ஃபிராக் போரிட்ஜ்’ உணவகத்தின் உரிமையாளர் 49 வயது புந்தோனோ, ஏறக்குறைய $3.8 மில்லியன் வரி ஏய்ப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர்மீது குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த ஆதாயங்களைக் கையாண்டதாக வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 3) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிராங்கூன் கார்டன்சில் உள்ள பிராக்டன் டிரைவில் இருக்கும் தரைவீடு ஒன்று, ‘லாம்போகினி அவென்டடோர்’ ஆடம்பரக் கார், $2.4 மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கம் ஆகியவை கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடியின் மூலம் அவர் பெற்றதாக நம்பப்பட்டது.
அந்தத் தரைவீடு, காரின் மதிப்பு குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
பண மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள், வரி விவகாரங்கள் தொடர்பான 27 குற்றச்சாட்டுகள் என மொத்தம் 30 குற்றச்சாட்டுகள் புந்தோனோமீது சுமத்தப்பட்டன.
2016 முதல் 2024 வரையிலான வரி மதிப்பீட்டு ஆண்டுகளில் தமது வர்த்தக வருமானத்தைக் குறைத்துக் காட்டியதன் மூலம், கிட்டத்தட்ட $2 மில்லியன் வருமான வரியைச் செலுத்தாமல் அவர் ஏமாற்றியதாகச் சொல்லப்பட்டது.
மேலும், தமது வர்த்தகங்கள் செலுத்த வேண்டிய சுமார் $1.8 மில்லியன் பொருள், சேவை வரியைச் செலுத்தாமல் அவர் ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் சிங்கப்பூர்க் காவல் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த விவகாரம் குறித்துக் கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளன.
புந்தோனோவின் வழக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

