தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஐசி’ எண்ணை மட்டும் பயன்படுத்தி அரசாங்கச் சேவைகளைப் பெறமுடியாது

2 mins read
7def2188-31ea-479e-b3a0-bd6d5a294833
தனது இணையச் சேவைகளின் வாயிலாக சிலரின் முகவரிகளை மோசடிக்காரர்கள் மாற்றியதாக ஜனவரி மாதம் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒருவரின் அடையாள அட்டை எண் (ஐசி), அது அளிக்கப்பட்ட தேதி ஆகியவற்றை மட்டும் வைத்து அரசாங்கம் தொடர்பான எந்த ஓர் இணையச் சேவையையும் பயன்படுத்த முடியாது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்து உள்ளது.

தனது இணையச் சேவைகளின் வாயிலாக சிலரின் முகவரிகளை மோசடிக்காரர்கள் மாற்றியதாக ஜனவரி மாதம் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூறியதைத் தொடர்ந்து அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டு உள்ளது.

முகவரிகளை மாற்ற, அடையாள அட்டை எண்ணையும் அது வெளியிடப்பட்ட தேதியையும் பயன்படுத்தி சிங்பாஸ் கணக்குகளில் புகுந்து மோசடிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவந்தது.

அப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதில் அளித்துள்ளது.

மின்னிலக்க பொதுச் சேவைகளில் நிகழும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டு உள்ளது என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் லீ உள்ளிட்ட உறுப்பினர்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மேலும், அனுமதியின்றி சிங்பாஸ் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட உள்ளன என்று இயோ சூ காங் எம்.பி. யிப் ஹான் வெங், ஜூரோங் குழுத்தொகுதி எம்.பி. டாக்டர் டான் வூ மெங் ஆகியோர் வினா எழுப்பி இருந்தனர்.

மேலும், அரசாங்கத்தின் எல்லாச் சேவைகளின் பாதுகாப்பும் சரிபார்க்கப்படுமா என்றும் அவர்கள் கேட்டிருந்தனர்.

அந்தக் கேள்விகளுக்கு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ எழுத்து மூலம் பதிலளித்தார்.

இணையச் சேவைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்க அமைப்புகள் சோதனை நடத்தியுள்ளதாக அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

முறைகேடாக மின்னிலக்க முகவரி மாற்றம் செய்யப்பட்டதுபோன்ற வேறு எந்த பரிவர்த்தனைகளும், அதாவது அடையாள அட்டை எண், அது அளிக்கப்பட்ட தேதி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்