சிங்கப்பூர் வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம் என்று போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மூண்ட போரால் ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் அதிகாரிகள் சிறந்த வழிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
வரிகளையும் கடன்களையும் அதிகரிக்கச் செய்யும் செலவுக்குப் பதிலாக தகுந்த வழிகளில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
மறுசீரமைப்பு முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்குவது, குறைந்த மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குச் செலவுகளைச் சமாளிக்க உதவுவது ஆகிய வழிகளை அவர் எடுத்துரைத்தார்.
வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க பிரபலமான, குறுகிய கால வழிகளைப் பின்பற்றலாம். ஆனால் சரியானதைச் செய்வது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 28) ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் வருடாந்தரப் பொருளியல் சமூக விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
நிறுவனங்கள் உற்பத்தித் திறனுடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. ஊழியர்கள் திறன்களைப் பெருக்கி, புதிய மாற்றத்திற்கு தயார் ஆனார்கள். இது வருமானம் அதிகரிக்கவும் வழி செய்தது.
இத்தகைய வழிகளால், பிரச்சினைகள் விலகிய பிறகும் புதிய சூழலில் நீண்டகாலப் பொருளியல் மாற்றத்திற்கு ஏற்ப சிங்கப்பூர் வலுப்பெற்று சரியான பாதையில் பயணிக்க முடியும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வரி மற்றும் கடன்கள் மூலம் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே போகலாம். ஆனால் அதிகம் செலவு செய்வது அரசியலுக்கும் பொருளியலுக்கும் நல்லதல்ல. பின்னர் கூடுதல் செலவினங்களுக்கு வரிகளை உயர்த்தியதாக அரசாங்கம் விமர்சிக்கப்படும்.
இத்தகைய பணவீக்க அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்ல, அரசாங்கம் பங்காற்றக்கூடிய இரண்டு துறைகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வது, முதலீடுகளுக்கான பாதைகளைத் திறப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைத் திட்டமிட்டு உருவாக்குதல் ஆகியவை இரண்டு துறைகள் என்றார்.
மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குவது உதவிகளில் அடங்கும். எரிசக்தி சிக்கனத்திறன் மானியமும் அவற்றில் ஒன்று. இது, நிறுவனங்களை ஆற்றல்மிக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது.
ஊழியர்களின் கல்விக் கட்டணத்திற்கு ஸ்கிஸ்ல்ஃபியூச்சர் தொழில்நிறுவன உதவி நிதி வழங்கப்படுகிறது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. தகுதிபெற்ற சிங்கப்பூரர்களுக்கு 200 முதல் 400 வெள்ளி வரை வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க ஒருமுறை சிறப்பு வழங்குதொகை வழங்கப்பட்டது. பயனீட்டுக் கட்டணங்களுக்கு யுசேவ் கழிவு, அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் போன்ற உதவிகளும் இவற்றில் அடங்கும்.

