பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில் தற்போது போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் அடுத்த வாரமே தொகுதியில் முழுவீச்சில் செயலாற்றத் தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஷான் விளையாட்டரங்கில் புதன்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கும் மேரிமவுண்ட் தனித்தொகுதிக்குமான பிரசாரக் கூட்டத்தின்போது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அவ்வாறு கூறினார்.
குழுத்தொகுதிக்கான வேட்பாளர் அணியை வழிநடத்தும் அமைச்சராகவும் உள்ள திரு சீ, தாங்கள் வெற்றிபெற்றால் மே 6ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகக் கூறினார். குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியினர் வெற்றி பெற்றால், வட்டாரத்துக்குக் காத்திருக்கும் மேம்பாடுகள் குறித்தும் திரு சீ விவரித்தார்.
10,000 இருக்கைகள் கொண்ட விளையாட்டரங்கு, உள்ளரங்கு விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ள தோ பாயோ ஒருங்கிணைந்த மேம்பாடு, 2030க்குள் முடியும் அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பே தயாராகிவிடும் என்றும் திரு சீ கூறினார்.
விரிவுபடுத்தபட்ட பலதுறை மருந்தகம், பொது நூலகம், நகரப் பூங்கா ஆகியவை இந்த வளாகத்தில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். பீஷான் வட்டாரத்தில் உணவங்காடி நிலையம் ஒன்றையும் அமைக்க முனைவதாகப் பிரசாரக் கூட்டத்தின்போது திரு சீ கூறினார்.
பிரேடல் வட்டாரத்திலும் மேம்பாடுகள் காத்திருக்கின்றன என்றார் திரு சீ. புளோக் 116க்கு அருகிலுள்ள பிரேடல் எம்ஆர்டி நிலையத்தின் வெளிவாயில் ‘பி’க்கும் ‘சி’க்கும் இடையே கூரையுடனான நடைபாதை ஒன்றை அமைக்கவும் நிலப் போக்குவரத்து ஆணையத்தைக் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.
மேலும், தமக்கு முன்னால் இத்தொகுதியின் மசெக அணியை வழிநடத்திய டாக்டர் இங் எங் ஹென்னுக்குத் திரு சீ நன்றி கூறினார்.
“எனக்குத் தற்போது 51 வயதாகிறது. நான் டாக்டர் இங் வகுத்த வழியில் பின்தொடர விரும்புகிறேன். அவரைப் போலவே, நான் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை உங்களுக்காகச் சேவையாற்ற விரும்புகிறேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பிரசார மேடையில் பேசிய டாக்டர் இங், கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டைத் திறம்பட ஆட்சி செய்த மக்கள் செயல் கட்சியைச் சிங்கப்பூரர்கள் நம்பலாம் எனக் கூறினார்.