சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான், இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் மீண்டும் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இம்மாதம் 26ஆம் தேதி வரை, தமது ‘ஆரஞ்சு & டீல்’ உணவகத்தில் நிதித் திரட்டு விருந்து நிகழ்ச்சிகளை அவர் அறிவித்துள்ளார்.
திரு சீ வெளியிட்டுள்ள காணொளியில், கல்வி, குடிநுழைவு தொடர்பான அரசாங்கக் கொள்கைகளை குறைகூறியதுடன் கல்வி தொடர்பான தமது கட்சியின் மாற்றுக் கொள்கைகளையும் முன்வைத்துள்ளார்.
தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) நீக்குதல், வகுப்பறைகளில் குறைவான மாணவர் எண்ணிக்கை (20 மாணவர்கள்: ஓர் ஆசிரியர்) போன்றவை அவற்றில் சில.
‘புக்கிட் பாத்தோக் நிதித் திரட்டு விருந்து’ என்று விளம்பரப்படுத்தப்படும் அவரது நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதில் இருக்கைக்கு முன்பதிவு செய்யக் குறைந்தது ஒருவருக்கு 100 வெள்ளி செலுத்த வேண்டும்.
இந்தப் பொதுத் தேர்தலில் புக்கிட் பாத்தோக் தொகுதியில் வெற்றிபெறத் தாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் நுழைவுச்சீட்டு ஒன்றை வாங்கும்படியும் காணொளியில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் டாக்டர் சீ, 45.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளையிடம் தோல்வியுற்றார்.

