பங்குகளை விற்க செவ்ரோன் எரிபொருள் நிறுவனம் முயற்சி

1 mins read
69cd593a-2fdb-45f4-bdc2-a9959402c139
சிங்கப்பூரிலுள்ள எஸ்ஆர்சி பதனீட்டு ஆலையின் விற்பனையையும் மற்ற ஆசிய சொத்துக்களையும் ஆராய்வது குறித்து செவ்ரோன், மோர்கன் ஸ்டேன்லி நிறுவனத்தை நியமித்துள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்க எரிபொருள் பெருநிறுவனமான செவ்ரோன், சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனியில் (எஸ்ஆர்சி) தனக்குச் சொந்தமாக உள்ள 50 விழுக்காடு பங்குகளின் விற்பனைக்காக ஒப்பந்தப் புள்ளிகளை நாடியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம், பெயர் குறிப்பிடப்படாத எட்டுத் தரப்புகளிலிருந்து தகவல் பெற்றுள்ளது.

ஆசியாவிலுள்ள தனது மற்ற சொத்துகளுக்கான வாடிக்கையாளர் ஆர்வத்தை அறியவும் செவ்ரோன் நிறுவனம் முற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் பிலிப்பீன்சிலும் உள்ள தனது சரக்குக் கப்பல் முனையம், எரிபொருள் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை அந்தச் சொத்துகளில் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செயல்பாடுகளை நெறிப்படுத்திச் செலவுகளைக் குறைக்கவும் செவ்ரோன் உலக அளவில் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும் நிலையில் இந்தச் சொத்துகள் விற்பனையை எதிர்நோக்குகின்றன. 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நிறுவனம் தனது ஊழியரணியை 20 விழுக்காடு வரை குறைக்கக்கூடும். 

சிங்கப்பூரிலுள்ள எஸ்ஆர்சி பதனீட்டு ஆலையின் விற்பனையையும் மற்ற ஆசிய சொத்துகளையும் ஆராய்வது குறித்து செவ்ரோன், மோர்கன் ஸ்டேன்லி நிறுவனத்தை நியமித்துள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டது. 

கச்சா எண்ணெய்யைப் பதப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி, நாளுக்கு ஏறத்தாழ 290,000 பீப்பாய்களைக் கையாள்கிறது. இந்நிறுவனம், சிங்கப்பூரின் ஆகச் சிறிய எண்ணெய்ப் பதனீட்டு நிறுவனமாகும்.  கச்சா எண்ணெய் தாங்கும் கப்பல்கள் நங்கூரமிடக்கூடிய ஏழு கப்பல் முனையங்கள் அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளன. 

குறிப்புச் சொற்கள்