வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை ஃபேர்பிரைஸ் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில கோழி இறைச்சி வகைகளையும் முட்டைகளையும் குறைந்த விலையில் வாங்கலாம்.
100க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் கடைகளுக்கு இது பொருந்தும். ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட செய்தி அறிக்கையில் இவ்வாண்டு இறுதி வரை குறிப்பிட்ட பழ, காய்கறி வகைகளுக்கான விலைக் கழிவை நீட்டிப்பதாகவும் தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் 30 டசூன் முட்டைகளின் (Dasoon Fresh Eggs) விலை 4.95 வெள்ளியாக இருக்கும். அதேபோல் ஒரு கிலோகிராம் சியாரா உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியின் (Seara Frozen Chicken – Griller) விலை 2.50 வெள்ளி.
வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சமாக இரு முட்டைத் தட்டுளையும் (60 முட்டைகள்) இரு கோழி இறைச்சிப் பொட்டலங்களையும்தான் வாங்க முடியும்.
இந்த விலைக் கழிவு ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் மட்டும்தான் வழங்கப்படுகிறது. ஃபேர்பிரைஸ் ஃபைனெஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்டிரா, ஃபேர்பிரைஸ் ஆன்லைன் ஆகிய கடைகள் அவற்றில் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் செலவைக் குறைக்க உதவி
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இரு உணவுப் பொருள்களும் ஆகக்குறைவான விலையில் விற்கப்படுவதாக ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது. அன்றாடம் வாங்கப்படும் புரதச்சத்து உணவு வகைகளைக் கட்டுப்படியான விலையில் வைத்திருக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு 2.5 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்த உதவுவது நோக்கம். ஆண்டிறுதியில் நடப்பில் இருக்கும் திட்டத்தின் அங்கமாக இந்நடவடிக்கை விளங்குவதாகவும் ஃபேர்பிரைஸ் குழுமம் குறிப்பிட்டது.
