அக்கம்பக்க பள்ளி ஆலோசனைக் குழுக்களில் தலைமை நிர்வாகிகள்

2 mins read
f49cf42b-9418-42f6-81bf-ac8820e92641
கிவ்ஃபெஸ்ட் ஆசியா கண்காட்சியை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்) பார்வையிட்டதுடன், தங்கள் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேசினார். - படம்: சாவ்பாவ்

நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடும்ப அலுவலகங்களைச் சேர்ந்த சொத்துமதிப்பு மிக்கோரை அக்கம்பக்கப் பள்ளிகளின் ஆலோசனைக் குழுக்களில் இணைப்பதற்குக் கல்வி அமைச்சுடன் உள்ளூர் தொண்டு நிறுவனமான ‘இம்பாக்ட்எஸ்ஜி’ இணைந்து செயல்படுகிறது.

பள்ளி வாரியப் பொருத்தத் திட்டம், அத்தகைய மனிதர்கள் பள்ளிக் குழுக்களில் பணியாற்ற ஊக்குவிக்கும். இது அவர்களின் கட்டமைப்புகள் மற்றும் அனுபவத்தின் மூலம் மாணவர்களிடம் சமூக மூலதனத்தை உருவாக்குகிறது. 2025ஆம் ஆண்டில் ஐந்து பள்ளிகளுடன் தொடங்கி, 2026ஆம் ஆண்டில் படிப்படியாகத் திட்டத்தை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

“நமது அனைத்துப் பள்ளிகளும் நன்கு ஆதரிக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், சமூக மூலதனத்தின் விநியோகம் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது,” என்று ‘இம்பாக்ட்எஸ்ஜி’ குழுவின் தலைவர் ரவி மேனன் தெரிவித்தார்.

“மற்ற பகுதிகளில் உள்ள மாணவர்கள் கொண்டிருக்கும் தொடர்புகள் அல்லது கட்டமைப்புகள் போல, சில அக்கம்பக்கப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உரைகள், கற்றல் பயணங்கள், பணி தொடர்பான பயிற்சிகள் இல்லை,” என்றும் திரு மேனன் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை (நவம்பர் 20) ‘இம்பாக்ட்எஸ்ஜி’ நடத்திய ‘கிவ்ஃபெஸ்ட் ஆசியா’ விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

இந்த அமைப்பு ஒரு வாழ்க்கைத்தொழில் வாய்ப்புத் திட்டத்தையும் நடத்துகிறது. அக்கம்பக்கப் பள்ளி மாணவர்கள் அனுபவம் வாய்ந்த நிறுவன நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளவும், அவர்களிடமிருந்து வாழ்க்கைத்தொழில் பாதைகள், மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதலைப் பெறவும் இது வகை செய்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், 15 பள்ளிகளில் கிட்டத்தட்ட 1,000 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவ 33க்கும் மேற்பட்டோர் தங்கள் நேரத்தை அர்ப்பணித்துள்ளனர்.

‘இம்பாக்ட்எஸ்ஜி’, கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டத்தை விரிவுபடுத்த, சிங்கப்பூர் இயக்குநர்கள் நிறுவனம் போன்ற பங்காளித்துவ கட்டமைப்புகளுடன் இணைந்து செயல்படும். இது, அந்தப் பள்ளிகளுக்கு 5,500க்கும் மேற்பட்ட தனிமனிதர்களின் நிபுணத்துவ அனுபவத்தை வழங்கும்.

நிச்சயமற்ற சூழலில் சமூகத்தின் உறுதிப்பாடு சோதிக்கப்படும் என்றும் கொடுக்கும் பண்பே அனைவரையும் பிணைக்கும் பசை என்றும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ விழாவில் கூறினார்.

“ஆனால், அரசாங்கத்தால் இதை தனியாகச் செய்ய முடியாது. அந்தக் கலாசாரத்தை உருவாக்க சமூக அமைப்புகளும், மக்களும், தனியார் துறையும் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டும்.

“இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டிய முக்கியமான இடம் நமது குழந்தைகளின் கல்வி,” என்று அவர் மேலும் கூறினார்.

“கல்வி என்பது நம் பள்ளிகளின்கீழ் உள்ளதாக நாங்கள் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வகுப்பறைக்கு அப்பால் சமூகம் மற்றும் கொடை ஆதரவு அவர்களின் கல்விப் பயணத்தில் செழிக்கத் தேவையான சூழலை உருவாக்க உதவும்,” என்றும் திரு லீ வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்